Last Updated : 05 Sep, 2015 09:17 AM

 

Published : 05 Sep 2015 09:17 AM
Last Updated : 05 Sep 2015 09:17 AM

கர்நாடகாவில் பருவமழை பொய்த்தது: தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் - கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பவில்லை

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவ மழை பொய்த்து, கடும் வறட்சி நிலவுவ‌தால் கிருஷ்ண ராஜ சாகர் அணை இன்னும் நிரம்பவில்லை. இதனால் தமிழகத்துக்கு நீர் திறக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் குடகு, தலைக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட ப‌ல பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை பொய்த்துவிட்டது. கடந்த‌ ஜூலை 24-ம் தேதி நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 109.80 அடியாக உயர்ந்த‌து. பருவமழை நீடித்தால் ஓரிரு வாரங்களில் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர் பார்க்கப்பட்டது. தமிழகத்துக்கு கணிசமாக தண்ணீர் திறக்கப் பட்டது.

ஆனால் அதன்பிறகு, மழை யளவு குறைந்தது. மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர், ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பொய்த்ததால் கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய காவிரியின் குறுக்கே உள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் காவிரியில் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு படிப் படியாக குறைக்கப்பட்டது.

124.80 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 103.65 அடியாக உள்ள‌து. அணைக்கு நொடிக்கு 2,300 கன அடி நீர் வரத்து உள்ளது. கர்நாடக பாசனத்துக்காக 1,700 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

தவிக்கும் கர்நாடகா

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய மழை பொய்த்த தால், அணையின் நீர்மட்டம் படிப் படியாக குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் மைசூரு, பெங்களூரு, ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கும் அபாயம் உள்ளது.

மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து 500 கன அடிக்கும் குறைவாக வந்துகொண்டிருப்ப தால் சிவனசமுத்திரா நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 10 மின் உற்பத்தி மையங்கள் உள்ள சிவனசமுத்திரா நீர்மின் நிலையத்தில் தற்போது 5 மின் உற்பத்தி மையங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இதனால் பெங்களூரு, மைசூரு, மண்டியா, ராம்நகர், கோலார், சிக்கப்பள்ளாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மைசூரு, மண்டியா, ராம்நகர் உள்ளிட்ட‌ மாவட்டங்களில் நடப் பாண்டு 90 சதவீத விதைப்புப் பணி கள் முடிவடைந்துள்ளன. கிருஷ்ண ராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரை நம்பி 60 ஆயிரம் ஹெக்டேரில் நெல், 35 ஆயிரம் ஹெக்டேரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. தவிர பரவலாக கேழ்வரகு, தக்காளி, வெண்டை உள்ளிட்ட காய்கறிக ளும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

மழை பொய்த்துள்ளதாலும், அணையில் நீர்மட்டம் குறைந் துள்ளதாலும் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.

கடந்த மூன்று மாதங்களில் மண்டியா மாவட்டத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தமிழகத்து நீர் கிடையாது

கிருஷ்ண ராஜ சாகர் அணை இந்த ஆண்டு நிரம்பாததால், தமிழகத்துக்கு நீர் திறக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி 292 டிஎம்சி நீரை வழங்காவிடில் தமிழக அரசும், விவசாய அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத் துக்கு எவ்வாறு நீர் விடுவது? பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட குடிநீர் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வது என கர்நாடக அரசு கவலையில் ஆழ்ந்துள்ளது.

தமிழகத்துக்கு திறக்க‌ப்படும் நீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், க‌ர்நாடக விவசாயிகளுக்கும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மண்டியா மாவட்ட விவசாயிகள் மைசூருவில் உள்ள காவிரி நீர் நிர்வாக ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வரும் அக்டோபரில் பருவமழை கைகொடுக்காவிட்டால் இரு மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினை மீண்டும் தலைதூக்கும் அபாயம் உள்ளது.

120 டிஎம்சி கிடைக்குமா?

இது தொடர்பாக கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், 'தி இந்து'விடம் கூறியதாவது:

ஆண்டுதோறும் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் முழுவதுமாக‌ நிரம்பிவிடும். ஆனால் இந்த ஆண்டு 4 அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. இருப்பினும் காவிரி ந‌டுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 173 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ள‌து.

தற்போது கர்நாடகா வறட்சியில் தவித்து வருவதால் தமிழகத்துக்கு நீர் திறப்பது கடந்த மாதத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் தேவைக்கே நீர் இல்லாத போது தமிழகத்துக்கு எப்படி நீர் வழங்க‌ முடியும்? கர்நாடக அணைகள் நிரம்பினால் மட்டுமே தமிழகத்துக்கு நீர் திறக்கப்படும்'' என்றார். கர்நாடகா வில் 100-க்கும் மேற்பட்ட வட்டங் கள் வறட்சியால் பாதிக்கப்பட்டவை யாக அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசிடம் ரூ. 11 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டுள்ளோம். சூழ்நிலையை தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும்''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x