Published : 17 Aug 2020 06:56 AM
Last Updated : 17 Aug 2020 06:56 AM

நுகர்வோர் வழக்குகளை தள்ளிவைத்து ஆண்டு முழுவதும் அலைக்கழிக்க கூடாது: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடெல்லி

நுகர்வோர் வழக்குகளில் உடனுக்குடன் தீர்ப்பு வழங்குமாறு தேசிய நுகர்வோர் சமரச தீர்ப்பு ஆணையத்தை (என்சிடிஆர்சி) உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. நுகர்வோர் வழக்குகளை ஆண்டு முழுவதும் தள்ளிப் போட்டு கடைசியில் அது உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு வரும் வகையில் அலைக்கழிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக எத்தகைய வழிகாட்டுதலையும் என்சிடிஆர்சி-க்கு உச்ச நீதிமன்றம் வழங்கவில்லை. எனினும் நிர்வாக ரீதியில் இதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆர்.கே. அகர்வால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இது தொடர்பாக நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளை உரிய நேரத்தில், சரியாக என்சிடிஆர்சி தலைவர் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது.

நுகர்வோர் நலனை பாதுகாப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கைகளை என்சிடிஆர்சி மேற்கொண்டுள்ளது. 2019-ம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி, தேவைப்பட்டால் என்சிடிஆர்சி அமைப்பே நேரடியாக நுகர்வோர் நலன் சார்ந்த வழக்குகளை விசாரிப்பதற்கான அதிகாரம் பொருந்திய அமைப்பாக விளங்குகிறது.

ரூ.10 கோடி மதிப்பிலான பொருள் அல்லது சேவையை என்சிடிஆர்சி விசாரிக்கலாம். முந்தைய சட்டத்தில் இந்த வரம்பானது ரூ.1 கோடியாக இருந்தது. இதற்கு அதிகமான முறையீடுகளை மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும்.

ஒரு வருடம் தள்ளிவைப்பு

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நகை வர்த்தக நிறுவனமான எல்.எம். ஜூவல்லர்ஸ், என்சிடிஆர்சி அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. பிப்ரவரி 28, 2020-ல் விசாரணைக்கு வந்த போது என்சிடிஆர்சி வழக்கு விசாரணையை ஜனவரி 5, 2021-க்கு தள்ளிவைத்தது. ஏறக்குறையை ஓராண்டுக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்கு விசாரணை நீண்ட காலத்துக்கு தள்ளிப்போடுவது எதிரானது என அதில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிகில் ஜெயின், மற்றொரு வழக்கு விசாரணையை என்சிடிஆர்சி மார்ச் 3, 2021-க்கு ஒத்தி வைத்ததை சுட்டிக் காட்டினார். பெரும்பாலான தீர்ப்பாயங்களில் போதிய கட்டமைப்பு வசதி இல்லாததும் சுட்டிக் காட்டப்பட்டது. சில நீதிமன்றங்களில் நீதிபதிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாகக் கூறப்பட்டது. வழக்கின் தன்மையை அறிந்து அதை எவ்வளவு காலம் தள்ளி வைக்கலாம் என்பதை நீதிபதிகள் உணர வேண்டும். அதேபோல அதற்கு விரைவாக இறுதி தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி கேஎம்.ஜோசப் சுட்டிக் காட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x