Published : 16 Aug 2020 06:26 PM
Last Updated : 16 Aug 2020 06:26 PM

வரலாற்றில் முதன்முறை: புதிய மாற்றங்களுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர்: கரோனா சூழலில் ஏற்பாடுகள் தீவிரம்

நாடுமுழுவதும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மழைகாலக் கூட்டத் தொடரை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்த புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூன் இறுதி வாரத்தில் வழக்கமாகத் தொடங்கும். கரோனா பரவல் அச்சுறுத்தலால் அத்தொடரை குறிப்பிட்ட காலத்தில் நடத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.

நாடாளுமன்ற விதிப்படி அதன் கூட்டத்தொடர் முடிவுபெற்ற ஆறு மாதங்களுக்கு முன்பாக அடுத்த தொடரை நடத்த வேண்டும். இந்தவகையில் கடைசியாக நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 23 -ல் நிறைவு பெற்றது.

இது ஏப்ரல் 2 வரை திட்டமிடப்பட்டாலும், கரோனா வைரஸ் பரவல் ஊரடங்கால் முன்னதாக முடிக்கப்பட்டது. இந்த சூழலில், அடுத்ததான மழைக்காலக் கூட்டத்தொடர் நடத்த செப்டம்பர் 22 ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.

கூட்டத்தொடரை கூட்டினால் உறுப்பினர்கள் இடையே சமூகவிலகல் கடைப்பிடிக்க வேண்டியதும் முக்கியக் காரணமாக உள்ளது. இதற்கான இடப்பற்றாக்குறை இருப்பதால் வேறு வாய்ப்புகள் குறித்து நாடாளுமன்ற இருஅவைகளால் ஆலோசிக்கப்பட்டது.

நாடாளுமன்ற மக்களவையின் மொத்த இருக்கைகள் 545, மாநிலங்களவையில் 250. நாடாளுமன்ற மத்திய அரங்கத்தின் மொத்த இருக்கைகள் 776 ஆகும். மாநிலங்களவை உறுப்பினர்களை சமூகவிலகலுடன் அமரவைக்கும் வசதிகள் தாராளமாக உள்ளன. மக்களவை உறுப்பினர்களுக்காக சில கூடுதல் ஏற்பாடுகளை செய்ய வேண்டி வரும்.

இதற்கு ஏற்ப நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் மழைக்காலக் கூட்டத்தொடரை நடத்த ஆலோசிக்கப்பட்டது. அதேசமயம் ஏதாவது ஒரு அவையின் எம்.பிக்களை ஒரு நேரத்தில் இரு அவை பகுதியிலும் சமூகவிலகலுடன் அமரவைத்து கூட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டது.

இந்த இரு அவைகளின் கூட்டம் குறித்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் விரிவான கலந்துரையாடலை நடத்தியுள்ளனர்.

இந்தநிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் என தெரிகிறது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மழைக்கால அமர்வின் போது செயல்படும் என்றாலும், அவை ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்திற்கு மட்டுமே செயல்படும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி முதலில் மக்களவை கூட்டத்தொடரும் அதைத் தொடர்ந்து மாநிலங்களவை கூட்டத்தொடரும் நடைபெறும். மக்களவை உறுப்பினர்களுக்கான கூட்டம் முடிந்த பின்னர் அவர்கள் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறுவார்கள். அதன் பின்னர் மாநிலங்களவை கூட்டம் நடைபெறும்.

இந்த கூட்டத்தொடரில் பத்திரிக்கையாளர்கள் குறைந்த அளவிலேயே அனுமதிக்கப்படுவார்கள். சபையில் மையப் பகுதியில் நான்கு பெரிய காட்சித் திரை, ஆடியோ கன்சோல்களுடன் நான்கு கேலரிகளில் ஆறு சிறிய திரைகள், புற ஊதா கிருமி நாசினிகள் கதிர்வீச்சு, ஆடியோ வீடியோ சிக்னல்களை அனுப்ப மக்களவை மற்றும் மாநிலங்களவையை இணைக்கும் வகையில் சிறப்பு கேபிள்கள், அதிகாரப்பூர்வ கேலரியைப் பிரிக்கும் பணிகள் போன்றவை நடந்து வருகின்றன.

இந்த ஏற்பாடுகள் அனைத்தும் கரோனா வைரஸ் தொற்றுநோயால் தேவைப்படும் சமூக விலகல் விதிமுறைகளுக்கு இணங்க நடைபெறும். 1952 முதல் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் தற்போது தான் முதல்முறையாக மாற்றம் செய்யப்படுகிறது

இதுகுறித்து மாநிலங்களவை செயலகம் கூறியுள்ளதாவது:

‘‘நாடாளுன்ற மழைக்கால கூட்டத்தொடரை தொடங்குவதற்கு ஏதுவாக ஆகஸ்ட் 3-வது வாரத்திற்குள் பணிகளை முடிக்குமாறு மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.

இதற்காவே வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. இதற்கான கூடுதல் பணிகள் தேவைப்படுகிறது. அவையில் பெரிய அளவில் கணிணி திரைகளை நிறுவி வருகிறோம்’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x