Published : 16 Aug 2020 08:17 AM
Last Updated : 16 Aug 2020 08:17 AM

ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின் பெண்களின் திருமண வயது நிர்ணயம் செய்ய சிறப்பு குழு: பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு குவியும் பாராட்டு

நாடு முழுவதும் ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின் வழங்கப்படுகிறது. பெண்களின் திருமண வயதை நிர்ணயிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதற்கு ட்விட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பெண்களின் திருமண வயதை நிர்ணயம் செய்வது தொடர்பாக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் மத்திய அரசிடம் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும். பெண்கள், குழந்தைகளின் ஊட்டச் சத்து குறைபாடு குறித்தும் இந்த குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன.

இவ்வாறு மோடி பேசினார்.

இந்நிலையில், பிரதமரின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பெண்களும், பெண்ணுரிமை செயற்பாட்டாளர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஒரு பெண் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “சானிட்டரி நாப்கின் என்ற வார்த்தையே மிகவும் ரகசியமானதாக நமது சமூகம் பார்க்கிறது. எனது வீட்டில் உள்ள ஆண்களிடம் எனக்கு சானிட்டரி நாப்கின் வாங்கி வாருங்கள் எனக் கூறினால், நிச்சயம் அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். ஆனால், நமது பிரதமர் மோடி, சுதந்திர தின உரையிலேயே நாப்கின் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். இவரை போன்ற ஆண்கள்தான் இன்றைய சமூகத்துக்கு தேவை” என கூறப்பட்டுள்ளது.

பெண்ணுரிமை செயற்பாட்டாளர் கஞ்ச் கபூர் தனது ட்விட்டர் பதிவில், “சானிட்டரி நாப்கின் குறித்து செங்கோட்டையில் நமது பிரதமர் பேசியுள்ளார். பெண்களின் மேம்பாட்டில் நமது சமூகம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் இது. மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகள் பொதுத் தளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இதனை வரவேற்கிறேன்” என கூறியுள்ளார்.

இதுபோன்ற நூற்றுக்கணக்கான பதிவுகள் ட்விட்டரில் பகிரப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x