Last Updated : 10 Sep, 2015 10:05 AM

 

Published : 10 Sep 2015 10:05 AM
Last Updated : 10 Sep 2015 10:05 AM

100 கிலோ தங்க அம்பாரிக்கு ரூ.15 கோடி: தசரா யானைகளுக்கு ரூ.35 லட்சம் காப்பீடு - மைசூரு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு

உலகப் புகழ் பெற்ற மைசூரு தசரா திருவிழாவில் பங்கேற்கும் யானைகள், பாகன்கள், பொதுமக்களுக்கு அந்த மாவட்ட நிர்வாகம் ரூ.89 லட்சம் மதிப்பில் காப்பீடு செய்துள்ளது. இதே போல தங்க அம்பாரிக்கும் ரூ.15 கோடி காப்பீடு செய்யப் பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரு வில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழாவின்போது கொண்டா டப்படும் தசரா உலகப் புகழ் பெற்றது.

கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் இந்த விழாவைக் காண பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குவிவார்கள்.

தசரா திருவிழாவின்போது யானைகள் ஊர்வலமாக செல்லும் 'ஜம்பு சவாரி' காண்பதற்கு மிகவும் பிரமாண்டமாக காட்சியளிக்கும். இந்த ஆண்டு சவாரியில் பங்கேற்க உள்ள 12 யானைகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல யானைகளை கவனித்துக்கொள்ளும் 12 பாகன் கள் மற்றும் 12 உதவியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.24 லட்சத்துக்கு காப்பீடு செய்யப் பட்டுள்ளது.

இதேபோல யானையால் சேதம் ஏற்பட்டால் நிவாரணம் வழங்குவதற்கு ஏதுவாக, ரூ.30 லட்சம் காப்பீடு செய்யப் பட்டுள்ளது. மேலும் 100 கிலோ வுக்கும் அதிகமான எடையுள்ள தங்க அம்பாரிக்கு ரூ.15 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக காப்பீடு நிறுவனத்துக்கு மைசூரு மாவட்ட நிர்வாகம் ரூ.55 ஆயிரம் பிரீமியமாக செலுத்தியுள்ளது.

இது தொடர்பாக மைசூரு மாவட்ட துணை வன பாதுகாப்பு அதிகாரி கே. கமலா கூறும்போது, “தச‌ரா விழாவில் பங்கேற்பதற்காக காட்டில் உள்ள யானைகள் அழைத்து வரப்படுகின்றன.

அவை ஊர்வலத்தின்போது மதம் பிடித்து, மக்களை தாக்க வாய்ப்புள்ளது. மேலும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே அவ்வாறு நிகழ்ந்தால் நிவாரணம் வழங்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.89 லட்சத்துக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x