Last Updated : 07 Sep, 2015 10:57 AM

 

Published : 07 Sep 2015 10:57 AM
Last Updated : 07 Sep 2015 10:57 AM

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசை சட்டரீதியாக எதிர்கொள்வோம்: கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் தகவல்

காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் எதிர்ப்பை சட்ட ரீதியாகவும் மத்திய அரசின் வழியாகவும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின்படி, கர்நாடகா வழங்க வேண்டிய 27.557 டி.எம்.சி. நீரை தமிழகத் துக்கு வழங்கவில்லை. தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் கர்நாடக அரசு உடனடி யாக காவிரி நீரை தமிழகத் துக்கு திறந்து விட வேண்டும்''என வலியுறுத்தி யுள்ளார்.

இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள அம்மாநில நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீலை, 'தி இந்து' சார்பாக தொலைப்பேசியில் கொண்டு பேசினோம். அப்போது அவர் கூறியதாவது:

கர்நாடகா முழுவதும் கடும் வறட்சி நிலவுவதின் காரணமாக நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கருகிக் கொண்டிருக்கின்றன. நீர் நிலைகளில் குடிக்கக் கூட நீரில்லாததால், கால்நடைகள் மடிந்து கொண்டிருக்கின்றன. பருவ மழை பொய்த்ததால் கர்நாடக அணைகள் நிரம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை இன்னும் முழுக் கொள்ளளவை எட்டவில்லை.

தற்போது கிருஷ்ணராஜசாகர் அணையில் 103 அடி நீர் மட்டுமே இருப்பு இருக்கிறது. இதே அளவு வறட்சி நீடித்தால் வருகிற கோடைகாலத்தில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட நகரங்களுக்கு குடிக்கக் கூட குடிநீர் கிடைக்காது.

எனவேதான் பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ண ராஜசாகர் அணையில் 15 டிஎம்சி நீரை இருப்பு வைக்குமாறு காவிரி நீர் நிர்வாக ஆணையத்துக்கு பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் கடிதம் எழுதியுள்ளது.

மண்டியா, ராம்நகர், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட மாவட்டங் களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரின்றி கருகும் நிலை உள்ளது.

இந்த நிலையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை வழங்கி இருக்கிறோம். கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்திருப்பதால், செப்டம்பர் மாதத்தில் தமிழகத்துக்கு விட வேண்டிய நீர் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு வழக்கம்போல கர்நாடகா நீர் வழங்கவில்லை என பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இத்தகைய எதிர்ப்பையும் குற்றச்சாட்டையும் சட்ட ரீதியாக உச்ச நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கிறோம். அதேபோல பிரதமர் மோடி கர்நாடக அரசிடம் விள‌க்கம் கேட்டால், அதனை முறைப்படி எடுத்துக்கூறுவோம். என்னைப் பொறுத்தவரை காவிரி நீர் விவகாரத்தை தமிழக அரசு அரசியல் ஆக்கக்கூடாது''என்றார்.

எதிர்க்கட்சிகள் ஆதரவு

இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் மைசூருவில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், '' கர்நாடக விவசாயிகளும் மக்களும் வறட்சியில் தவித்துக் கொண்டிருக்கும்போது, தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது''என்றார்.

கர்நாடக அரசின் நிலைப்பாட்டுக்கு அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் (பாஜக) ஆதரவு தெரிவித்துள்ளார். கர்நாடக பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, உண்மை நிலையை எடுத்துக்கூற இருப்பதாகவும் தெரிவித்தார். இதே போல மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமியும் கர்நாடக அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

நடுவர் மன்ற தீர்ப்பின்படி, ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை வழங்கி இருக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x