Published : 25 Sep 2015 09:42 AM
Last Updated : 25 Sep 2015 09:42 AM

சக்கர ஸ்நானத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா, நேற்று காலையில் சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது. கடந்த 9 நாட்களாக நடந்த இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய் துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி, பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த விழாவில், ஆந்திரா, தெலங்கானா, தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளா ஆகிய தென் மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து 9 நாட்களாக நடந்த இந்த விழாவினி இறுதி நாளான நேற்று காலையில், சுவாமி கோயில் குளத்தில் சக்கர ஸ்நானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுதர்சன சக்கரத்தாழ்வார் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு வராக சுவாமி கோயில் அருகே சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது.

இதைத் தொடர்ந்து சக்கரத்தாழ்வாருக்கு கோயில் குளத்தில் புனித நீராடும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது குளத்தின் அருகே காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் மாலையில் கொடி இறக்க நிகழ்ச்சி நடந்தது. இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது.

இந்த விழாவைத் தொடர்ந்து வரும்அக்டோபர் 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.

5.19 லட்சம் பக்தர்கள் ரூ.15.15 கோடி உண்டியல் வருமானம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின்போது 5.19 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். ரூ.15.15 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தி உள்ளனர். இதுகுறித்து நேற்று மாலை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் திருமலையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரம்மோற்சவ விழாவில் 5.19 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளனர். கடந்த 9 நாட்களில் ரூ.15 கோடியே, 15 லட்சத்து, 68 ஆயிரத்தை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர் இவ்விழாவின்போது 9.14 லட்சம் பேருக்கு அன்னதானம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த விழாவில், 2.38 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். உடல் நலம் சரியில்லாத 38,800 பேருக்கு அஸ்வினி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்த அக்டோபர் மாதம் 14-ம் தேதி தொடங்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x