Published : 05 Aug 2020 03:59 PM
Last Updated : 05 Aug 2020 03:59 PM

ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பு; மதச்சார்பின்மைக்கு தோல்வி- இந்துத்துவாவுக்கு வெற்றி: ஒவைஸி மீண்டும் சாடல்

ஹைதராபாத்

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டது பதவியேற்பு உறுதிமொழியை மீறி செயல் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி மீண்டும் சாடியுள்ளார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இதன்படி இன்று (ஆகஸ்ட் 5-ம் தேதி) அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. பிரதமர் மோடி கலந்து கொண்டு ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.

வேத மந்திரங்களை முழங்கி, பூஜை பூஜையைத் தொடங்கினர். பூமி பூஜை முடிந்தபின் ராமர் கோயிலுக்காக 40 கிலோ எடையுள்ள முதல் வெள்ளி செங்கல்லை பிரதமர் மோடி தொட்டு வைத்து அடிக்கல் நாட்டினார்.

விழாவில் உ.பி. ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை தலைவர் நிருத்திய கோபால் தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் மோடி, மோகன் பாகவத், ஆதித்யநாத், ஆனந்திபென் படேல் ஆகியோரும் முகக்கவசம் அணிந்து, சமூக விலகலுடன் பூஜையில் பங்கேற்றனர்.

மற்ற விஐபிக்கள், சாதுக்கள், பீடாதிபதிகள் என நூற்றுக்கணக்கோர் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர். இந்தநிலையில் பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க கூடாத என ஏஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி ஏற்கெனவே கூறியிருந்தார். பூமி பூஜை முடிவடைந்த நிலையில் அவர் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி கூறியதாவது:
‘‘இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்து அடிக்கல் நாட்டியதன் மூலம் தனது பதவியேற்பு உறுதி மொழியை மீறியுள்ளார். இன்றைய தினம் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை தோல்வியடைந்த நாள். இந்துத்துவாவின் வெற்றி தினம்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x