Last Updated : 18 Sep, 2015 09:35 AM

 

Published : 18 Sep 2015 09:35 AM
Last Updated : 18 Sep 2015 09:35 AM

கர்நாடக சிறையில் இருந்து நன்னடத்தை அடிப்படையில் 252 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை

கர்நாடக மாநில‌த்தில் உள்ள சிறைகளில் 14 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்த 252 ஆயுள் தண்டனை கைதிகள், நன்னடத்தை விதிகளின் அடிப் படையில் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலையானவர்களை அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

கடந்த ஜூலை மாதம் ஆயுள் தண்டனை கைதிகளின் விடுதலை குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம், '' ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலே வாடும் சூழல் நிலவுகிறது. ஒரு சில மாநிலங்களில் 20 முதல் 30 ஆண்டுகள் வரை கூட ஆயுள் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான ஆயுள் தண்டனை கைதிகள் 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறை யில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளின் உடல் நிலை, நன்னடத்தை விதிகளை அடிப் படையாக கொண்டும் வழக்கின் தன்மையையும் கருத்தில் கொண்டு விடுதலை செய்யலாம். குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகள் விடுதலை கோரி அரசிடம் முறையிட்டு இருக்கிறார்கள். ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க மாநில அரசு முன்வர வேண்டும்''என உத்தரவிட்டது.

இதையடுத்து கர்நாடக அரசு, 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை பெற்ற ஆயுள் தண்டனை கைதிகளின் பட்டியலையும், விடுதலை செய்ய வேண்டியவர்கள் பற்றிய பரிந்துரையையும் சமர்ப்பிக் குமாறு சிறைத்துறைக்கு உத்தர விட்டது.

இதனைத் தொடர்ந்து கர்நாடக சிறைத்துறை 260 ஆயுள் தண்டனை கைதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது.

இதனை பரிசீலனை செய்த கர்நாடக அரசு, 14 ஆண்டு களுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள், கைதிகளின் உடல் நிலை, சிறையில் நடந்துகொண்ட முறை உள்ளிட்ட வற்றை ஆய்வு செய்தது. இதில் 252 கைதிகள் விடுதலை செய்ய தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்டு, பெயர் பட்டியல் ஆளுநர் வஜூபாய் வாலாவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்பட்டியலுக்கு ஆளுநர் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு சிறைகளில் உள்ள 252 ஆயுள் தண்டனை கைதிகள் நேற்று மாலை 5.30 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

குடும்பத்தை பிரிந்து, சிறையில் தவித்தவர்கள் விடுதலையா வதால் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். பெங்களூரு சிறைவாசலின் முன்பாக திரண்டிருந்த உறவினர் கள், நண்பர்கள் விடுதலை யானவர்களை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x