Published : 24 Jul 2020 09:52 PM
Last Updated : 24 Jul 2020 09:52 PM

கரோனா பாதிப்பு; புதிதாக அதிகரிக்கும் 9 மாநிலங்கள்: அதிகாரிகளுடன் அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை

கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ள 9 மாநிலங்களின் அதிகாரிகளுடன் அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார்.

மருத்துவப் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும், நோய்த் தடுப்புத் திட்டத்தை கடுமையாகப் பின்பற்ற வேண்டும், சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும், நோய் சிகிச்சை மேலாண்மையை செம்மைப்படுத்த வேண்டும் என்று தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


கோவிட்-19 நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசும் மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளும் மேற்கொண்ட படிப்படியான, ஆக்கபூர்வமான, முன்னேற்றகரமான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் காரணமாக, கோவிட் நோய் பாதித்தவர்களில் குணம் அடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தொற்று நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை விகிதம் குறைந்து கொண்டிருக்கிறது. இருந்தபோதிலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அண்மைக்காலமாக சில மாநிலங்களில் அதிகரித்து வருவதால், கோவிட் மேலாண்மைக் கண்ணோட்டத்தில் கவலைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.

கோவிட்-19 நோய்த் தொற்றை சிறப்பாகக் கட்டுப்படுத்துதல் மற்றும் சிகிச்சை உள்ளிட்ட வசதிகளை மேலாண்மை செய்வதில் மத்திய - மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த உத்தியிலான செயல்பாட்டின் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சரவைச் செயலர் தலைமையில் மெய்நிகர் உயர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தற்போது நோயின் தாக்கம் அதிகமாக உள்ள, 9 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் சுகாதாரத் துறைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். ஆந்திரப்
பிரதேசம், பிஹார், தெலங்கானா, ஒடிசா, மேற்குவங்கம், அசாம், கர்நாடகா, ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களின் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

சுகாதாரத் துறை செயலாளர்கள் மற்றும் மாநில அதிகாரிகளுடன், அந்தந்த மாநிலங்களின் நிலைமைகள் பற்றி அமைச்சரவைச் செயலாளர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். சமீப காலங்களில் நோய்ப் பரவல் அதிகமாக இருப்பதற்கான காரணங்கள் குறித்து அவர் கேட்டறிந்தார். ``பரிசோதனை செய்தல், தடமறிதல், சிகிச்சை அளித்தல்'' என்ற உத்தியைக் கருத்தில் கொண்டு, நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்தி பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களை அமைச்சரவைச் செயலாளர் கேட்டுக் கொண்டார். நோய் பாதிப்புகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து, நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கு, தீவிரமாக பரிசோதனை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களை முறையாக எல்லை பிரித்தல்; நோயாளிகளின் தொடர்பில் இருந்தவர்களைத் தடமறிதல் மற்றும் கட்டுப்பாட்டுப் பகுதியில் வீடு வீடாகப் பரிசோதனை செய்தல் ஆகியவற்றின் மூலம் நோய் பரவல் சங்கிலித் தொடரை உடைக்க முடியும் என்று அவர் கூறினார். கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கு வெளியில் உள்ள இடைமுக மண்டலங்களிலும், SARI/ILI போன்ற தீவிர மூச்சுக் கோளாறுகள் உள்ளவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பதும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

போதிய அளவில் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவக் கட்டமைப்பில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். நோயாளிகளைப் பராமரிப்பதில் தடையற்ற செயல்பாடுகள் இருப்பதை உறுதி செய்வதற்கு, வரையறுக்கப்பட்ட சிகிச்சை தரங்களின் நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அவர் கூறினார். நோயாளிகள் யாரையும் அழைத்துச் செல்ல மறுக்காத அளவுக்கு ஆம்புலன்ஸ் வசதிகளை செய்யுமாறு அவர் ஆலோசனை கூறினார்.

உயிரிழப்பு விகிதங்களைக் குறைவாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சரவைச் செயலர் வலியுறுத்தினார். இதற்கு, அதிக பாதிப்பு வாய்ப்பு உள்ளவர்களை கண்காணிப்பது அவசியம், குறிப்பாக முதியவர்களையும், உயிரிழப்பை ஏற்படுத்தும் தன்மை உள்ள மற்ற நோய்களின் பாதிப்புக்கு ஆளானவர்களையும் கண்காணிப்பது அவசியம் என்றார் அவர்.

கோவிட்-19 நோய் பரவாமல் தடுப்பதில், ஆரம்பகட்டத்திலேயே நோய்த் தாக்குதலைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல் தான் முக்கியம் என்று மாநிலங்களின் கவனத்துக் கொண்டு வரப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x