Last Updated : 24 Jul, 2020 01:09 PM

 

Published : 24 Jul 2020 01:09 PM
Last Updated : 24 Jul 2020 01:09 PM

மாநிலங்களவையில் 24 சதவீத எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்கு; ரூ.4 ஆயிரம் கோடி சொத்து வைத்துள்ள எம்.பி.; 10 சதவீதம் மட்டுமே பெண்களுக்கு வாய்ப்பு: ஏடிஆர் ஆய்வில் தகவல்

மாநிலங்களவையில் தற்போது இருக்கும் 229 எம்.பி.க்களில் கால்பகுதி அதாவது 24 சதவீத எம்.பி.க்கள் (54 பேர்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 12 சதவீதம் (28) பேர் மீது தீவிரமான கிரிமினல் வழக்குகள் உள்ளன என்று ஐனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாநிலங்களவைக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து 233 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால், இன்னும் 3 இடங்கள் காலியாக இருப்பதால் 229 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். இதில் கேரள எம்.பி. கே.கே.ராகேஷ் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் கிடைக்கவில்லை என்பதால், மற்ற எம்.பி.க்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பின் (ஏடிஆர்) ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

கிரிமினல் குற்றச்சாட்டு

மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 229 எம்.பி.க்களில் 24 சதவீதம் பேர் மீது அதாவது 54 எம்.பி.க்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டு இருக்கிறது என பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 சதவீதம் அல்லது து 28 எம்.பி.க்கள் மீது தீவிரமான கிரிமினல் குற்றச்சாட்டு இருக்கிறது.

அரசியல் கட்சிகளின் வாரியாக கிரிமினல் குற்றச்சாட்டு இருக்கும் எம்.பி.க்களைக் கணக்கெடுத்தால், அதிகபட்சமாக பாஜகவுக்கு மாநிலங்களவையில் 77 எம்.பி.க்கள் உள்ளனர். இந்த 77 எம்.பி.க்களில் 18 சதவீதம் பேர் மீது அதாவது 14 எம்.பி.க்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டு இருக்கிறது.

அடுத்ததாக 40 எம்.பி.க்கள் வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியில் 20 சதவீதம் அதாவது 8 எம்.பி.க்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டு இருக்கிறது. மூன்றாவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் உள்ள 13 எம்.பி.க்களில் 2 பேர் மீதும், பிஜூ ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 9 எம்.பி.க்களில் 3 பேர் (33 சதவீதம்) மீது கிரிமினல் வழக்கு உள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 எம்.பி.க்களில் 3 பேர் மீதும், சமாஜ்வாதிக் கட்சியின் 8 எம்.பி.க்களில் 2 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. 4 எம்.பி.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. இதில் காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் மீது பாலியல் பலாத்கார வழக்கும், 4 எம்.பி.க்கள் மீது கொலைமுயற்சி (ஐபிசி 307) வழக்குகளும் உள்ளன.

மாநில வாரியாக எம்.பி.க்கள்

கிரிமினல் வழக்குகள் உள்ள எம்.பி.க்களில் மாநில வாரியாகக் கணக்கிட்டால், அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.பி.க்களில் 20 சதவீதம் பேர் அதாவது 6 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து 19 எம்.பி.க்கள் தேர்வான நிலையில் அதில் 42 சதவீதம் பேர் அதாவது 9 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

தமிழகத்திலிருந்து 18 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 22 சதவீதம் பேர், அதாவது 4 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

மேற்கு வங்கத்திலிருந்து 13 எம்.பி.க்கள் தேர்வான நிலையில், அதில் 13 சதவீதம் பேர் அதாவது 2 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. பிஹார் மாநிலத்திலிருந்து தேர்வான 15 எம்.பி.க்களில் 8 பேர் மீது (53 சதவீதம் பேர் மீது) கிரிமினல் வழக்குகள் உள்ளன.

89 சதவீத எம்.பி.க்கள் கோடீஸ்வரர்கள்

229 எம்.பி.க்களில் 89 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். அதாவது 203 எம்.பி.க்கள் தங்கள் பிரமாணப் பத்திரத்தில் தங்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.1 கோடிக்கும் அதிகமாகச் சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதில் பாஜகவைச் சேர்ந்த எம்.பி.க்களில் (69 எம்.பி.க்கள்) 90 சதவீதம் பேர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களில் 93 சதவீதம் (37 எம்.பி.க்கள்) பேர் கோடீஸ்வரர்கள். அஇஅதிமுகவிலிருந்து தேர்வான 9 எம்.பி.க்களும் கோடீஸ்வரர்கள், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களில் 69 சதவீதம் (9 எம்.பி.க்கள்) பேர் மட்டுமே கோடீஸ்வரர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 கோடிக்கும் அதிகமாக சொத்து இருப்பதாக 86 எம்.பி.க்கள் (36 சதவீதம்) பேர் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளனர்.

ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடிவரை சொத்து இருப்பதாக 36 எம்.பி.க்களும் (16 சதவீதம்), ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடிவரை சொத்து இருப்பதாக 81 எம்.பி.க்களும் (35 சதவீதம்) தெரிவித்துள்ளனர்.

ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடிவரை சொத்து இருப்பதாக 22 எம்.பி.க்களும் (10 சதவீதம்), ரூ.20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதாக 4 எம்.பி.க்களும் தெரிவித்துள்ளனர்.

மேலும், அஇஅதிமுக, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், சிரோன்மணி அகாலிதளம், சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் கோடீஸ்வரர்கள்.

கட்சி வாரியாகப் பார்த்தால் பாஜகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் 77 பேரின் சராசரி சொத்து மதிப்பு என்பது ரூ.27 கோடியாகும்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.38 கோடியாகும்.
அதிமுக எம்.பி.க்கள் 9 பேரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.6 கோடியாகவும், திமுக எம்.பி.க்கள் 7 பேரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.6 கோடியாகவும் உள்ளது.

சமாஜ்வாதிக் கட்சியின் எம்.பி.க்கள் 8 பேரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.129 கோடியாகவும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எம்.பி.க்கள் 5 பேரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.821 கோடியாகவும் உள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் 6 பேரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.538 கோடியாக உள்ளது.

அதிக சொத்துள்ள எம்.பி.

அதிகமான சொத்துகள் வைத்துள்ள எம்.பி. பிஹார் மாநிலத்தில் ஆளும் கட்சியான நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யாவார். ஜேடியு கட்சி எம்.பி.யான மகேந்திர பிரசாத்தின் சொத்து மதிப்பு ரூ.4 ஆயிரத்து 78 கோடியாகும். இவரின் அசையும் சொத்து மதிப்பு ரூ.40,43,48,19,318. அசையா சொத்தின் மதிப்பு, ரூ.34,92,41,000 ஆகும்.

2-வது இடத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அலா அயோத்தியா ராமி ரெட்டி உள்ளார். இவர் தன்னிடம் ரூ.2,577 கோடி சொத்து இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

3-வது இடத்தில் உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதிக் கட்சியைச் சேர்ந்த ஜெயா பச்சனுக்கு ரூ.1001 கோடி சொத்து உள்ளது.

மிகக் குறைவான சொத்து

இதில் மிகக்குறைவாக மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. மகாராஜா சனஜோபா லீஸ்ஹெம்பாவிடம் ரூ.5 லட்சம் மட்டுமே சொத்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங்கிடம் ரூ.6 லட்சமும், ஜார்க்கண்ட் மாநிலத்தின் பாஜக எம்.பி. சமீர் ஓரனிடம் ரூ.18 லட்சம் சொத்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.க்களின் கல்வித் தகுதி

மாநிலங்களவை எம்.பி.க்களில் 10 சதவீதம் அதாவது 24 எம்.பி.க்கள் கல்வித் தகுதி என்பது 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர் ஒருவர், 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் 9 பேர், 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் 14 எம்.பிக்கள்.

200 எம்.பி.க்களில் 87 சதவீத எம்.பி.க்கள் பட்டப்படிப்பு முடித்தவர்கள். இதில் 56 எம்.பி.க்கள் பட்டப்படிப்பும், 56 எம்.பி.க்கள் தொழிற் பட்டப்படிப்பும் முடித்தவர்கள். 61 எம்.பி.க்கள் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், 27 எம்.பி.க்கள் முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர். 5 எம்.பி.க்கள் பட்டயப்படிப்பு (டிப்ளமோ) முடித்தவர்கள்.

எம்.பி.க்களின் வயது

80 வயது அதற்கு மேற்பட்டவர்கள் என்று பிரமாணப் பத்திரத்தில் 3 எம்.பி.க்கள் குறிப்பிட்டுள்ளனர். 61 வயது முதல் 80 வயது வரை 46 சதவீத எம்.பி.க்கள், அதாவது 105 எம்.பி.க்கள் மாநிலங்களவையில் உள்ளனர்.
41 வயது முதல் 60 வயதுவரை 51 சதவீத எம்.பி.க்கள் அதாவது117 எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இடம் பெற்றுள்ளனர். 31 வயது முதல் 40 வயதுக்குள்ளாக வெறும் 2 சதவீதம் பேர் மட்டுமே அதாவது 4 எம்.பி.க்கள் மட்டுேம உள்ளனர்.

எத்தனை முறை தேர்வு?

மாநிலங்களவையில் உள்ள எம்.பி.க்களில் 65 சதவீதம் பேர் அதாவது 149 பேர் முதல் முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 18 சதவீதம் அல்லது 41 பேர் 2-வது முறையாகவும், 9 சதவீதம் அல்லது 21 எம்.பி.க்கள் 3-வது முறையாகவும் மாநிலங்களவைக்குத் தேர்வாகியுள்ளனர்.

10 எம்.பி.க்கள் அல்லது 4 சதவீதம் பேர் 4-வது முறையாகவும், 3 சதவீதம் அல்லது 6 எம்.பிக்கள் 6-வது முறையாகவும், ஒரு எம்.பி. 6-வது மற்றும் 7-வது முறையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெண்கள் 10 சதவீதம் மட்டுமே

229 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் பெண்களின் பங்கு என்பது வெறும் 10 சதவீதம் மட்டுமே அதாவது 22 பெண் எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர்.

இவ்வாறு ஏடிஆர் இணைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x