Last Updated : 07 Sep, 2015 02:48 PM

 

Published : 07 Sep 2015 02:48 PM
Last Updated : 07 Sep 2015 02:48 PM

போர் வந்தால் இந்தியாவுக்கு தாங்க முடியாத பேரிழப்பு ஏற்படும்: பாகிஸ்தான் ராணுவத் தளபதி எச்சரிக்கை

ஒருவேளை போர் வந்தால், இந்தியாவுக்கு அது தாங்க முடியாத பேரிழப்பை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ரஹீல் ஷரீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1965- இந்தியாவுடனான போர் குறித்த 50-வது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமையன்று ராவல்பிண்டியில் நடைபெற்றது.

அதில் பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷரீப், “எங்களுக்கு எதிராக செலுத்தப்படும் அனைத்து விதமான போர்களுக்கும் எங்கள் நாட்டு ஆயுதப்படையினர் தயாராகவே உள்ளனர். போர் நோக்கம் கொண்ட புறச்சக்திகளை வீழ்த்தும் திறமை கொண்டவர்கள் எங்கள் ராணுவப் படையினர். எனவே பகைவர்கள், அளவில் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அவர்கள் தாங்க முடியாத இழப்புகளை சந்திக்க நேரிடும்.

பாகிஸ்தான் ராணுவம், உள்நாட்டு, அயல்நாட்டு அச்சுறுத்தல்களை திறம்பட முறியடிக்கும் திறன் கொண்டது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். அந்த அச்சுறுத்தல்கள் மரபுரீதியானதாக இருக்கலாம், பனிப்போராக இருக்கலாம், நீண்ட நாள் போராகவும் இருக்கலாம், குறுகிய காலப் போராகவும் இருக்கலாம். எதற்கும் நாங்கள் தயார்” என்றார்.

கடந்த வாரம், இந்திய ராணுவத் தளபதி, “இந்திய ராணுவம், குறுகிய எதிர்கால போர்களுக்கு தயாராகவே உள்ளது” என்று கூறியதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவ தளபதி தற்போது கூறியுள்ளதாகத் தெரிகிறது.

அதேபோல் காஷ்மீர் பிரச்சினை பற்றி கூறிய பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஐ.நா. தீர்மானத்தின் படி காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

மேலும், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை பற்றி கூறிய அவர், “பயங்கரவாதிகள், அவர்களுக்கு ஆதரவளிப்போர், நிதியுதவி செய்வோர், அவர்கள் சார்பாக வாதிடுவோர் அனைவரையும் நீதிக்கு முன்னால் நிறுத்தும் வரை ஓய மாட்டோம், ஆப்கானிஸ்தானில் அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம், ஆனால் சில தீய சக்திகள் எங்கள் முயற்சிகளை முறியடிக்க திட்டமிட்டு வருகின்றன” என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x