Last Updated : 06 Sep, 2015 09:40 AM

 

Published : 06 Sep 2015 09:40 AM
Last Updated : 06 Sep 2015 09:40 AM

டெல்லி, பெங்களூரு விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் பெங்களூருவில் கைது

டெல்லி, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 6 விமானங்களுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் பெங்களூருவில் கைது செய்யப் பட்டார். அவரிடம் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தகவல் தொடர்பு மையத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அள‌வில் மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், “ஹாங்காங் செல்லும் இரு விமானங்களிலும், ஜூரிச் செல்லும் ஒரு விமானத்திலும் வெடிகுண்டு இருக்கிறது” எனக் கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதற்குள் ஹாங்காங் செல்லும் விமானம் புறப்பட்டு விட்டது. உடனடியாக பைலட்டுக்கு தகவல் கொடுத்ததையடுத்து விமானம் அவசரமாக‌ தரையிறக்கப்பட்டது. நள்ளிரவில் பயணிகள் இறக்கிவிடப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் தீவிர சோதனை நடத்தினர். இதேபோல மற்ற விமானத்திலும் வெடிகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் நள்ளிரவு 1.41 மணி அளவில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச‌ விமான நிலையத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், “ஏர் பிரான்ஸ், லுப்தான்ஸா மற்றும் ஹஜ் செல்லும் விமானங்களில் வெடிகுண்டு இருக்கிறது” என தெரிவித்துள்ளார். இதையடுத்து பெங்களூரு விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த விமான நிலைய போலீஸார், தொலைபேசியில் மிரட்டல் விடுத்த நபரை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். முதல்கட்ட விசாரணையில் டெல்லி விமான நிலையத்துக்கும், பெங்களூரு விமான நிலையத்துக்கும் ஒரே நபர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. பெங்களூரு தெற்குப் பகுதியை சேர்ந்த அவர் டெல்லி விமான நிலையத்துக்கு ஒரு இடத்தில் இருந்தும், பெங்களூரு விமான நிலையத்துக்கு வேறொரு இடத்தில் இருந்தும் தொலைபேசியில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் நேற்று காலை கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி, பெங்களூரு விமான நிலையங்களுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையிலும் பாதுகாப்பு அதிகரிப்பு

மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குநர் தீபக் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “டெல்லி, பெங்களூர் விமான நிலையங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டலைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்பேரில் சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. எச்சரிக்கையின் பேரில் பயணிகளிடமும், விமான நிலையத்துக்கு வந்து செல்பவர்களிடமும் தனித்தனியாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x