Published : 19 Jun 2020 04:06 PM
Last Updated : 19 Jun 2020 04:06 PM

2-ம் உலக போரின் 75-ம் ஆண்டு வெற்றி தினம்: மாஸ்கோ செஞ்சதுக்க நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் பங்கேற்பு

புதுடெல்லி

2-ம் உலக போரில் ரஷ்யா பெற்ற வெற்றியின் 75-ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர்.

2-ம் உலகப்போரில் சோவியத் மக்கள் பெற்ற வெற்றியின் 75வது ஆண்டு நினைவு நாளையொட்டி 24 ஜுன் 2020ல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடைபெறவுள்ள ராணுவ அணிவகுப்பில் இந்தியாவில் இருந்து கர்னல் அளவிலான தகுதிநிலை அதிகாரியின் தலைமையின் கீழ் அனைத்துவித பதவி நிலைகளையும் சேர்ந்த 75 இந்தியப் படைவீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இரண்டாவது உலகப் போரின் போது அச்சு நாடுகளுக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கப் போர், மேற்கு பாலைவனப் போர் மற்றும் ஐரோப்பிய அரங்குப் போர் ஆகியவற்றில் நேச நாடுகளின் பெரும்படைகள் போரிட்டன. அத்தகைய நேசநாடுகளின் பெரும்படைகளில் ஒன்றாக பிரிட்டிஷ் இந்திய
ராணுவப் படையும் பங்கேற்று இருந்தது. இந்தப் போர்களில் பங்கேற்ற இந்திய ராணுவத்தினரில் 87,000 வீரர்கள் இறந்தனர் மற்றும் 34,354 வீரர்கள் காயம் அடைந்தனர். அனைத்துப் போர்முனைகளிலும் இந்திய ராணுவத்தினர் போரிட்டதோடு தெற்குப்பகுதி, ட்ரான்ஸ்-ஈரானியன். லென்ட்-லீஸ் பாதை ஆகிய நெடுவழிகளில் சரக்குப் போக்குவரத்துக்கும் உதவி புரிந்தனர்.

இந்தப் பெருவழிகளின் மூலம் ஆயுதங்கள், வெடிபொருட்கள், உபகரண உதவிப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் சோவியத் ஒன்றியம், ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கு எடுத்துச் செல்ல உதவினர். இந்தியப் போர்வீரர்களின் வீரத்தை பாராட்டி 4,000க்கும் அதிகமான விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் 18 விக்டோரியா மற்றும் ஜார்ஜ் கிராஸ் விருதுகளும் உள்ளடங்கும். இதனோடு சோவியத் ஒன்றியமும் இந்திய ராணுவப் படையினரின் வீரதீரச் செயல்களைப் பாராட்டி 23 மே 1944 அன்று மிக்கைல் காலினின் மற்றும் அலெக்சாண்டர் கோர்கின் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டு பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி யூஎஸ்எஸ்ஆர்-இன் சுப்ரீம் சோவியத் ஆட்சிக்குழு ராயல் இந்தியன் ஆர்மி
சர்வீஸ் வீரர்களான சுபேதார் நாராயண் ராவ் நிக்காம் மற்றும் ஹவில்தார் கஜேந்திர சிங் சந்த் இருவருக்கும் மதிப்புமிகுந்த ஆர்டர் ஆஃப் ரெட் ஸ்டார் விருதுகளை வழங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x