Last Updated : 19 Jun, 2020 02:50 PM

 

Published : 19 Jun 2020 02:50 PM
Last Updated : 19 Jun 2020 02:50 PM

கரோனாவில் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்களுக்கான தனிமைப்படுத்தும் நாட்கள் குறைப்பு: மத்திய சுகாதாரத்துறை புதிய அறிவிப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கான தனிமைப்படுத்தும் காலத்தை 14 நாட்களில் இருந்து 7 நாட்களாகக் குறைத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன் கடந்த மாதம் 15-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், “கரோனா நோய் அறிகுறி இருந்தாலும், தொற்று உறுதி செய்யப்பட்டாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தனிமைப்படுத்தும் காலம் தற்போது 7 நாட்களாகக் குறைக்கப்பட்டது. அவ்வாறு குறைத்தாலும், பாதிக்கப்பட்ட மருத்துவர், செவிலியர் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தேவைப்பட்டால் தனிமைப்படுத்தும் காலத்தை நீட்டிக்கும் முடிவை அந்தத் துறை அதிகாரி அல்லது தலைமை அதிகாரி எடுக்கலாம் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு கரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மட்டுமல்லாமல் கரோனா பாதிப்பு அல்லாத வார்டில் பணியாற்றுவோருக்கும் பொருந்தும்.

மேலும், இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு:

''கரோனாவில் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களைத் தனிமைப்படுத்தும்போது அவர்களின் வயது, உடல்நலன், அவர்களுக்கு ஏதேனும் நீண்டநோய்கள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து தனிமைப்படுத்தும் காலத்தை முடிவு செய்ய வேண்டும்.

ஒருவேளை நீண்டகால நோய்களால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் ஐசிஎம்ஆர் விதிமுறைகள்படி, அவர்களைத் தீவிரமாகக் கண்காணித்துப் பராமரிக்க வேண்டும். அறிகுறி இல்லாமல் கரோனாவில் பாஸிட்டிவ் எனத் தெரிந்திருந்தாலும் இந்த விதிமுறைகளைத்தான் பின்பற்ற வேண்டும்

கரோனாவில் பாதிக்கப்படும் மருத்துவப் பணியாளர்களுக்கு அறிகுறிகள் லேசாக இருந்தால், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒருவேளை அறிகுறிகள் தீவிரமடைந்து ஆக்சிஜன் தேவைப்பட்டால் அருகே இருக்கும் கோவிட் மருத்துவமனைக்கு உடனடியாகச் செல்ல வேண்டும்.

மருத்துவப் பணியில் இருந்து பிறருடன் அதிகமான தொடர்பில் இல்லாதவர்களுக்கு லேசான கரோனா அறிகுறி இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து பணியாற்றலாம். ஒருவேளை அறிகுறிகள் தீவிரமடைந்தால், மேலே குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்''.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x