Last Updated : 18 Jun, 2020 12:31 PM

 

Published : 18 Jun 2020 12:31 PM
Last Updated : 18 Jun 2020 12:31 PM

சீனாவின் பேச்சு மிகைப்படுத்தப்பட்டது; ஏற்க முடியாதது: மத்திய வெளியுறவுத்துறை மறுப்பு

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் தங்களுக்கு இறையாண்மை இருக்கிறது என்று கூறும் சீனாவின் பேச்சு மிகைப்படுத்தப்பட்டது. ஏற்றுக்கொள்ள முடியாத கூற்று என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் வீரமரணம் அடைந்ததனர். அதேபோல, சீன ராணுவம் தரப்பில் 35 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்பட்டாலும் அது குறித்து சீனா இதுவரை அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை.

சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூவா லிஜான், பெய்ஜிங்கில் நேற்று அளித்த பேட்டியில், “கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு சீனாவுக்குச் சொந்தமானது. சீனாவுக்கே அதில் இறையாண்மையுள்ளது.

ஆனால், எல்லை ஒப்பந்தத்தை மீறி இந்திய வீரர்கள் ஆத்திரமூட்டும் வகையில் செயல்படுகிறார்கள். இந்த எல்லைப் பிரச்சினையை இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேசித் தீர்க்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

சீன வெளியுறவுத்துறை அமைச்சகம், கல்வான் பள்ளத்தாக்கு தங்களுக்குச் சொந்தமானது என்று கூறியதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ லடாக்கில் நடந்த சம்பவங்கள் குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம், அமைச்சர் ஆகியோரிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் பேசப்பட்டது.

இருதரப்பிலும் லாடாக்கில் உள்ள சூழலைப் பொறுப்புணர்வுடன் கையாள வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. கடந்த 6-ம் தேதி இரு நாட்டு ராணுவத்தின் மூத்த கமாண்டர்கள் பேச்சின்படி என்ன முடிவு எடுக்கப்பட்டதோ அந்த முடிவின் படி செயல்படவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஆனால், கல்வான் பள்ளத்தாக்கு தங்களுடையது, அதில் இறையாண்மை இருக்கிறது எனச் சொல்லும் சீனாவின் கூற்று மிகைப்படுத்தப்பட்டது. அது ஏற்க முடியாத கூற்று” எனத் தெரிவித்தார்.

முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை சார்பில் கடுமையான எச்சரிக்கை சீனாவுக்கு விடுக்கப்பட்டது. அதில், “கல்வான் பள்ளத்தாக்கில் எப்போதும் இல்லாத வகையில் நடந்துள்ள சம்பவத்தால் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டது, இரு நாட்டு உறவில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வன்முறைச் சம்பவத்துக்கு சீன ராணுவம் நேரடியாகவே பொறுப்பேற்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தொலைபேசி வாயிலாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் வி யுடன் நேற்று பேசினார். அப்போதும் இந்தியா தரப்பில் கடுமையான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது. சீனா தனது நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்து, மாற்றிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x