Last Updated : 11 Jun, 2020 06:20 PM

 

Published : 11 Jun 2020 06:20 PM
Last Updated : 11 Jun 2020 06:20 PM

சமூகப் பரவலா? டெல்லியில் கரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்துக்கும் அதிகமா? கடந்த 8 நாட்களில் 10 ஆயிரம் பேருக்கு தொற்று; என்ன நடக்கிறது?

தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த 8 நாட்களில் மட்டும் புதிதாக 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளைக் கணக்கிடுவதிலும் முரண்பாடுகள் இருப்பதால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவில் இறந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட கணக்கின்படி 2.86 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 10 நாட்களில் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி எண்ணிக்கை வந்துள்ளது.

ஜூன் 1-ம் தேதி முதல் தொடர்ந்து 9 ஆயிரம் பேருக்குக் குறைவில்லாமல் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால் ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல ஒட்டுமொத்த உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பகுதியும் கடந்த 10 நாட்களில் நடந்துள்ளது.

கடந்த ஜனவரி 30-ம் தேதி, முதல் கரோனா நோயாளி இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டார். அதன்பின் 100 நாட்களுக்குப் பின் மே 18-ம் தேதி இந்தியா ஒரு லட்சம் பேரை எட்டியது. ஆனால், அடுத்த ஒரு லட்சம் கரோனா நோயாளிகள் 2 வாரங்களிலும், கடந்த 10 நாட்களில் ஏறக்குறை 90 ஆயிரத்துக்கும் மேல் கரோனா பாதிப்பு ஏற்பட்டு 3 லட்சம் எண்ணிக்கையை இந்த வாரம் எட்ட உள்ளது.

தலைநகர் டெல்லியின் நிலையும் சற்றும் குறைவில்லாமல் இருந்து வருகிறது. டெல்லியில் 4-வது லாக்டவுன் தளர்வுக்குப் பின் மக்கள் சுதந்திரமாக நடமாடத் தொடங்கிய பின் கரோனா பரவல் வேகம் தீவிரமடைந்துள்ளது.

குறிப்பாக மே 28-ம் தேதியிலிருந்து கடந்த 4-ம் தேதி வரை நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதில் அதிகபட்சமாக கடந்த 3-ம் தேதி 1,513 பேர் பாதிக்கப்பட்டனர்.

உயிரிழப்புகளும் கடந்த மே மாதத்தில் நாள்தோறும் 5 என்ற எண்ணிக்கைக்குள் இருந்த நிலையில் கடந்த 10 நாட்களாக நாள்தோறும் 30-க்குக் குறைவில்லாமல் இருந்து வருகிறது. இதனால் கடந்த 10 நாட்களில் டெல்லியில் உயிரிழப்பு 700க்கும் மேலாக அதிகரித்தது.

அதுமட்டுமல்லாமல் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை டெல்லியில் கடந்த 11 நாட்களாக படிப்படியாக் குறைந்து 48 சதவீதத்துக்கு மேல் இருந்த நிலையில் 39 சதவீதத்துக்கும் கீழ் வந்துவிட்டது. இது சமூகப்பரவல் வந்துவிட்டதா எனும் கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்புகிறது.

ஆனால், சமூகப் பரவல் வந்துவிட்டதாக மத்திய அரசு மட்டும்தான் அறிவிக்க வேண்டும் என்பதால் டெல்லி அரசு அதுகுறித்து வாய்திறக்க மறுக்கிறது. ஆனால், டெல்லியில் உள்ள புகழ்பெற்ற மருத்துவ வல்லுநர்கள், ஐசிஎம்ஆர் முன்னாள் தலைவர் என்.கங்குலி ஆகியோர் டெல்லியில் சமூகப் பரவல் வந்துவிட்டது என்று தெரிவிக்கின்றனர்.

இன்றைய நிலவரப்படி டெல்லியில் கரோனாவால் 984 பேர் உயிரிழந்துள்ளனர். 32 ஆயிரத்து 810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1-ம் தேதி முதல் சராசரியாக நாள்தோறும் 1,250 பேர் பாதிக்கப்பட்டு வருவதால், 8 நாட்களில் 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

10 ஆயிரம் பேரிலிருந்து 20 ஆயிரம் பாதிப்பை எட்ட 13 நாட்கள் தேவைப்பட்ட நிலையில் 8 நாட்களில் 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரத்தை எட்டியுள்ளது.

கடந்த மார்ச் 1-ம் தேதி டெல்லியின் கிழக்கில் முதல் கரோனா நோயாளி கண்டறியப்பட்டார். இத்தாலியிலிருந்து வந்த அந்த வர்த்தகருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதன்பின் மே 18-ம் தேதி டெல்லியில் கரோனாவால் 10,054 பேர் பாதிக்கப்பட்டனர். அதாவது நாள்தோறும் சராசரியாக 127 பேருக்கு மேல் பாதிக்கப்படவில்லை என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அடுத்த 13 நாட்களில் டெல்லியில் கரோனா பாதிப்பு 19, 844 ஆக அதிகரித்தது.

உயிரிழப்பை எடுத்துக்கொண்டால், மே 18-ம் தேதி வரை 160 பேர் மட்டுமே உயிரிழந்திருந்த நிலையில் மே 31-ம் தேதி 473 ஆக அதிகரித்தது. டெல்லியில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படாமல் இருந்த நிலையில் மே 28-ம் தேதி முதல் முறையாக பாதிப்பு ஆயிரத்தைக் கடந்து ஜூன் 3-ம் தேதி உச்சபட்சமாக 1,533 பேர் பாதிக்கப்பட்டனர்.

ஆனால், டெல்லி அரசு வெளியிட்ட அறிக்கையில், “டெல்லியில் இப்போதுள்ள சூழலில் வரும் 15-ம் தேதிக்குள் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 44 ஆயிரமாக அதிகரிக்கலாம். 6,600 படுக்கைகள் கூடுதலாகத் தேவைப்படும். ஜூன் 30-ம் தேதிக்குள் டெல்லியில் ஒரு லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அப்போது கூடுதலாக 15 ஆயிரம் படுக்கைகள் தேவைப்படும்.

ஜூலை 15-ம் தேதிக்குள் 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 33 ஆயிரம் படுக்கைகள் தேவைப்படும். இப்போதுள்ள நிலையில் கரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் நாட்கள் 12 முதல் 13 நாட்களாகக் குறைந்தால் நிச்சயம் படுக்கைக்குப் பற்றாக்குறை ஏற்படும்.

ஜூலை மாத இறுதிக்குள் டெல்லியில் கரோனாவால் 5.50 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அப்போது அரசு மருத்துவமனைகளில் 80 ஆயிரம் படுக்கைகள் வரை தேவைப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் சமூகப் பரவலுக்கு முக்கியக் காரணியாகச் சொல்லப்படும், கரோனா தொற்றின் மூலம் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. அந்தக் காரணி இருப்பதாக டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். அவர் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூட, 'டெல்லியில் சமூகப் பரவல் இல்லை. ஆனால், டெல்லியில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் பாதிப் பேருக்கு தொற்றின் மூலம் தெரியவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சமூகப் பரவல் இல்லை எனத் தெரிவிக்கும் டெல்லி அரசு மறுபுறம் ஜூலை இறுதிக்குள் 5.5 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்படுவார் என அச்சமூட்டுகிறது.

இந்த அளவு தீவிரமாக கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் சமூகப் பரவல் இல்லை, சமூகப் பரவல் இருக்கிறதா என்பதை மத்திய அரசுதான் கூறவேண்டும் என்று டெல்லி அரசு மழுப்புகிறது.

அதுமட்டுமல்லமல் டெல்லியில் கரோனா உயிரிழப்பு இதுவரை 984 என்று ஆம் ஆத்மி அரசுக் கணக்கில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், டெல்லியில் உள்ள 3 மாநராட்சிகளில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை கரோனாவுக்கான பாதுகாப்பு முறைப்படி இறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ஆம் ஆத்மி அரசு வெளியிட்ட இறப்பு வீதத்துக்கும், டெல்லி மாநகராட்சி வெளியிட்ட இறப்பு வீதத்துக்கும் ஏராளமான முரண்பாடுகள் இருக்கின்றன. டெல்லியில் வடக்கு, தெற்கு கிழக்கு மாநகராட்சி என 3 பிரிவுகள் இருக்கின்றன.

இதில் வடக்கு டெல்லி மாநகராட்சியின் தலைவர் ஜெய் பிரகாஷ் வெளியிட்ட அறிக்கையில், “தெற்கு டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் 1,080 பேர், வடக்கு டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 976 பேர், கிழக்கு டெல்லியில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் கரோனாவில் இறந்தவர்களை எவ்வாறு அடக்கம் செய்ய வேண்டுமோ அந்த விதிமுறைகள் பின்பற்றப்பட்டு புதைக்கப்பட்டும், எரிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் டெல்லியில் உண்மையில் கரோனா வைரஸால் இறந்தவர்கள் எத்தனே பேர்? உயிரிழப்பு 2 ஆயிரமாக இருந்தது உண்மையென்றால் ஏன் ஆம் ஆத்மி அரசு மறைக்கிறது?. சமூகப் பரவலை மறைக்க இறப்புகளை வெளியே சொல்ல அச்சப்படுகிறார்களா?, சமூகப் பரவல் வந்துவிட்டதாக மருத்துவ வல்லுநர்கள் பலர் தெரிவித்துள்ளபோது மத்திய அரசும், டெல்லி அரசும் ஏன் மறைக்கின்றன? சமூகப் பரவலுக்கான அளவுகோல் என்ன? என்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x