Published : 03 Jun 2020 07:33 PM
Last Updated : 03 Jun 2020 07:33 PM

தாயகம் திரும்பும் இந்தியரா? - வேலைவாய்ப்பு பெற தகவல் பதிவு செய்யலாம்

புதுடெல்லி

வெளிநாட்டிலிருந்து திரும்பும் இந்தியர்கள் உள்நாட்டில் வேலை பெறும் பொருட்டு அவர்களின் திறன்கள் குறித்த தகவல்களை சேகரிக்க மத்திய அரசு நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

தற்போதைய பெருந்தொற்றின் காரணமாக நாடு திரும்பும் திறன்வாய்ந்த பணியாளர்களை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், ஸ்வதேஸ் என்னும் 'வேலைவாய்ப்பு உதவிக்காக திறன்வாய்ந்த பணியாளர்கள் வருகைத் தகவல் தரவுத்தளத்தை' (SWADES - Skilled Workers Arrival Database for Employment Support) இந்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம், வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் நாடு திரும்பிய குடிமக்களின் திறன்கள் குறித்த தகவல்களை அரசு சேகரித்து விவரணையாக்கம் செய்யும். திறன் மேம்பாடு, தொழில் முனைதல் அமைச்சகம், விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் இந்தக் கூட்டு முயற்சி, தகுதியுள்ள நபர்களின் தரவுத்தளத்தை அவர்களின் திறமைகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் உருவாக்கி, இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்யும்.

நாட்டில் உள்ள தகுந்த பணியிட வாய்ப்புகளுக்காக சேகரிக்கப்பட்ட தகவல்கள் நிறுவனங்களுடன் பகிரப்படும். ஆன்லைன் ஸ்வதேஸ் திறன்கள் அட்டையை நாடு திரும்பும் நபர்கள் பூர்த்தி செய்யவேண்டும். மாநில அரசுகள், தொழில் அமைப்புகள் மற்றும் முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நாடு திரும்பியவர்களுக்கு உகந்த வேலை வாய்ப்புகளை வழங்கும் மூலோபாயக் கட்டமைப்பு ஒன்றுக்கு இந்த அட்டை வழிவகுக்கும். திறன் மேம்பாடு, தொழில் முனைதல் அமைச்சகத்தின் செயல்படுத்தும் பிரிவான தேசிய திறன் வளர்ச்சி நிறுவனம் இந்தத் திட்டத்தின் செயலாக்கத்தை ஆதரிக்கிறது.

இந்தக் கூட்டு முயற்சியைப் பற்றி பேசிய மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைதல் அமைச்சர், திரு.மகேந்திர நாத் பாண்டே, "இது ஒரு சோதனையான காலம். கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவால் உருவாகியுள்ள சவால்களைச் சமாளிக்க மத்திய

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒட்டு மொத்த நாடும் ஒன்று திரண்டு ஆதரவளிப்பது அவசியம் ஆகும். வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் நாடு திரும்பிய குடிமக்களின் திறன்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து விவரணையாக்கம் செய்ய, விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தோடு இணைவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியின் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்னும் கொள்கையால் உந்தப்பட்டு, ஸ்வதேஸ் திறன் அட்டை மூலம் சேகரிக்கப்படும்

தகவல்கள், குடிமக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி, தேவை-விநியோக இடைவெளியைப் பூர்த்தி செய்யும்" என்றார்.

இந்த முயற்சியைப் பற்றிய தன்னுடைய எண்ணங்களைப் பதிவு செய்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர், திரு. ஹர்தீப் சிங் புரி, "வந்தே பாரத் இயக்கத்தை நாங்கள் தொடங்கிய போது, எண்ணற்ற நமது வெளிநாட்டுப் பணியாளர்கள் வேலை இழப்பின் காரணமாக நாடு திரும்புவதையும், அவர்களின் சர்வதேசத் திறமைகளும், அனுபவங்களும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு பெரும் மதிப்பை சேர்க்கும் என்பதையும் கண்டறிந்தோம். ஸ்வதேஸ் திறன் அட்டையில் தகவல்கள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய, வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் விமானங்களை இயக்கும் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் விமானங்களுக்குள் அறிவிப்புகளைச் செய்கின்றன. இந்தத் திட்டத்தைப் பற்றி நாடு திரும்பும் நமது மக்கள் அனைவரும் அறிந்து கொள்வதை உறுதி செய்ய, இந்திய விமான நிலைய ஆணையமும் மற்றும் இதர தனியார் விமான நிலையங்களும் பதாகைகள்/பலகைகள் மற்றும் டிஜிட்டல் அடையாளங்களை வைத்துள்ளன," என்றார்.

வெளியுறவுத் துறை அமைச்சர், டாக்டர். சுப்பிரமணியம் ஜெய்சங்கர் பேசுகையில், "நாவல் கொரோனா வைரசின் பரவலால் உருவாகியுள்ள வரலாறு காணாத உலகளாவிய அவசர நிலையைக் கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் சிக்கியுள்ள நமது குடிமக்களுக்கு அனைத்து விதமான ஆதரவையும் அளித்து, வேலை இழப்புகளால் அவர்கள் சந்திக்கும் சவால்களை எளிதாக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். பல்வேறு நாடுகளில் உள்ள நமது தூதரங்கங்கள், உயர்மட்ட ஆணையகங்கள் மற்றும் அலுவலகங்கள் மூலம் ஸ்வதேஸ் திறன் அட்டையை நாங்கள் முனைப்புடன் விளம்பரப்படுத்துவோம். நாடு திரும்பும் இந்தியப் பணியாளர்களுக்கு அவர்களின் திறமைகளுக்கு ஏற்ப வேலைகள் கிடைக்க இது உறுதி செய்யும்," என்றார்.

www.nsdcindia.org/swades என்னும் தளத்தில் கிடைக்கும் இணைய விண்ணப்பம் நாடு திரும்பும் நபர்களைப் பற்றியத் தேவையான தகவல்களைச் சேகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பணித் துறை, பதவி, வேலை, அனுபவம் பற்றிய தகவல்களை இந்தப் படிவம் சேகரிக்கும். இந்தப் படிவத்தை நிரப்பும் போது சந்தேகங்கள் ஏதேனும் ஏற்பட்டால் அவற்றைத் தெளிவுப்படுத்த இலவச உதவி எண் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.

30 மே, 2020 அன்று தொடங்கப்பட்ட ஸ்வதேஸ் திறன் அட்டை (ஆன்லைன்), 3 ஜூன், 2020 (பிற்பகல் 2 மணி) வரை 7000 பதிவுகளைப் பெற்றுள்ளது. இது வரை சேகரிக்கப்பட்டுள்ள தகவல்களின் படி, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து தான் அதிக அளவில் நமது மக்கள் நாடு திரும்புகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. திறமைகள் குறித்து சேகரித்துள்ள தகவல்களின் படி, எண்ணெய், எரிவாயு, கட்டுமானம், சுற்றுலா, விருந்தோம்பல், வாகனங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளில் தான் இவர்களில் பெரும்பாலானோர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்தப் பணியாளர்கள் தான் அதிக அளவில் நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x