Last Updated : 11 Aug, 2015 11:56 AM

 

Published : 11 Aug 2015 11:56 AM
Last Updated : 11 Aug 2015 11:56 AM

யோகேந்திர யாதவ் மீது போலீஸ் தாக்குதல்: கேஜ்ரிவால் கண்டனம்

டெல்லியில், சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதற்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மியின் முன்னாள் உறுப்பினரும், ஸ்வராஜ் அபியான் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனருமான யோகேந்திர யாதவ் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் நலனை வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை தனது சகாக்களுடன் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தன்னை போலீஸார் அடித்து, இழுத்து அவமதித்தாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜந்தர் மந்தர் பகுதியில் என்னுடன் இணைந்து 96 பேர் விவசாயிகள் நலனை வலியுறுத்தி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். அங்கு வந்த போலீஸார் என்னை அடித்தனர். என்னை வலுக்கட்டாயமாக காவல்நிலையத்துக்கு இழுத்துச் சென்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சட்டை கிழிந்த நிலையில் தோன்றும் புகைப்படம் ஒன்றையும் அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

போலீஸ் விளக்கம்:

இச்சம்பவம் குறித்து டெல்லி போலீஸ் ஆணையர் விஜய் சிங் கூறும்போது, "அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தவறானவை. வீண் வதந்திகளை அவர் கிளப்பி விடுகிறார். கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே போராட்டம் நடத்த யோகேந்திர யாதவ் போலீஸ் முன் அனுமதி பெற்றிருந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு திடீரென தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கொண்டு வரும் 14-ம் தேதி வரை போராட்டத்தை தொடர விரும்புவதாகக் கூறினார். 15-ம் தேதி சுதந்திர தின விழா பாதுகாப்பு பணிகளை முன்னிட்டு அனுமதி அளிக்க முடியாது எனக் கூறினோம். நாங்கள் அங்கு சென்றபோது யோகேந்திர யாதவின் ஆதரவாளர்கள் எங்களுடன் ஒத்துழைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை கைது செய்தோம்" என்றார்.

இருப்பினும், இன்று அதிகாலையில் டெல்லியில் இருந்து ஒளிபரப்பான சில செய்தி சேனல்களில், யோகேந்திர யாதவை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றன என்பது கவனிக்கத்தக்கது.

கேஜ்ரிவால் கண்டனம்:

இந்நிலையில், யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்ட விதத்துக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "யோகேந்திர யாதவிடம் டெல்லி போலீஸார் நடந்து கொண்ட விதத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

அவர் அறவழியில் தனது போராட்டத்தை மேற்கொண்டிருந்தார். அது அவரது அடிப்படை உரிமையாகும். அப்படியிருக்க அவரை டெல்லி போலீஸார் நடத்தியவிதம் கண்டனத்துக்குரியது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x