Published : 10 Aug 2015 03:30 PM
Last Updated : 10 Aug 2015 03:30 PM

ஆபாச வலைதளங்கள் விவகாரம்: சர்வாதிகாரம் காட்டவில்லை என்கிறது மத்திய அரசு

ஆபாச வலைதளங்களை தடுப்பதில் சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்ளவில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

அண்மையில், மத்திய அரசின் உத்தரவின் பேரில், இணைய சேவை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நாடு முழுவதும் 850-க்கும் மேற்பட்ட போர்னோ என்படும் ஆபாச வலைதளங்களை முடக்கியதாக தகவல் வெளியானது.

இது நாடு முழுவதும் பரவலாக விமர்சனங்களை எழுப்பியது. சமூக வலைதளங்கள் பலவற்றில் மத்திய அரசின் நடவடிக்கை கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில், ஆபாச வலைதளங்களை தடுப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரஸ்தோகி, "குடிமக்கள் தனிநபர் சுதந்திரத்தை அத்துமீறவோ அல்லது ஒழுக்க நெறிகள் பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்கும் வேலையையோ அரசு செய்யவில்லை. ஆபாச வலைதளங்கள் விவகாரத்தில் அரசு நிச்சயமாக சர்வாதிகாரப் போக்குடன் செயல்படவில்லை.

இருப்பினும், குழந்தைகளை வைத்து உருவாக்கப்படும் ஆபாச வலைதளங்களை தடுப்பதில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. மற்ற வடிவிலான ஆபாச படங்களை தடுப்பது தேவையா என்பது குறித்த விவாதம் நாடாளுமன்றத்திலோ அல்லது பொது வெளியிலோ விவாதிக்கப்பட வேண்டியதே தவிர நீதிமன்றத்தில் அல்ல.

இவ்விவகாரத்தில் சர்வாதிகாரப் போக்கு சரியாகாது. வயது வந்த ஒரு நபர் தனிமையில் ஆபாச படத்தைப் பார்த்தால் அதை எப்படி தடுக்க முடியும்?

டிஜிட்டல் இந்தியா பற்றி பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் இது சாதியமற்றது. பிரதமர் தனது சுதந்திர தின உரையில் எதைப் பற்றியெல்லாம் பேச வேண்டும் என்பதை நாட்டு மக்களே பரிந்துரைக்கும் தொழில்நுட்ப மேம்பாட்டை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இத்தகைய சூழலில், "இணையத்தில் நீ இதை பார்க்கலாம்; அதை பார்க்கக் கூடாது என்றெல்லாம் தடை விதிக்க முடியாது". அதேபோல் தடையை மீறி ஆபாச இணைய சேவையை வழங்குபவர்களை கண்டறிவது மிகவும் கடினமான முறையாக இருக்கிறது" எனக் கூறினார்.

அரசுத் தரப்பு வாதத்தை கேட்ட நீதிமன்ற அமர்வு வழக்கு விசாரணை மற்றொரு நாள் தொடரும் எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x