Published : 15 May 2020 07:52 AM
Last Updated : 15 May 2020 07:52 AM

குறுகிய கால சேவை அடிப்படையில் ராணுவத்தில் 3 ஆண்டு பணியாற்ற வாய்ப்பு- இளைஞர்களுக்கான புதிய திட்டம் தயார்

ராணுவத்தின் குறுகிய கால சேவையின் கீழ் இளைஞர்கள் 3 ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பளிக்கும் புதிய திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் நிரந்தர சேவை, குறுகிய கால சேவை ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். நிரந்தர சேவையில் பணியாற்ற மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி, உத்தராகண்ட் தலைநகர் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி, பிஹாரின் கயாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் சேர வேண்டும்.

இவற்றில் பயிற்சி பெறுகிறவர்கள் ராணுவத்தின் நிரந்தர சேவைஅதிகாரிகளாக பணியாற்றுகின்றனர். இவர்களில் கர்னல் பதவியில் இருப்பவர்கள் 54 வயதிலும் அதற்கு மேற்பட்ட பதவி வகிப்பவர்கள் 60 வயதிலும் ஓய்வு பெறுகின்றனர். ராணுவ தலைமைத் தளபதி பதவியேற்றது முதல் 3 ஆண்டுகள் அல்லது அவர் 62 வயதை பூர்த்தி செய்யும் வரை பதவியில் நீடிப்பார்.

ராணுவத்தின் குறுகிய கால சேவையில் அதிகாரிகளாக சேருபவர்கள் 10 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை பணியில் நீடிக்கலாம். தகுதி மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் அவர்கள் நிரந்தர பணியிலும் சேர்க்கப்படுகின்றனர். ராணுவ வீரர்களைப் பொறுத்தவரை 19-20 வயதில் பணியில் சேருகின்றனர். அவர்கள் 17 ஆண்டுகள் வரை ராணுவத்தில் சேவையாற்றுகிறார்கள்.

இந்நிலையில், ராணுவத்தின் குறுகிய கால சேவையின் கீழ் இளைஞர்கள் 3 ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பளிக்கும் புதிய திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதல்கட்டமாக 100 அதிகாரிகள், 1,000 வீரர்களை தேர்வு செய்ய ராணுவ தலைமை திட்டமிட்டுள்ளது. முதல் ஓராண்டுஅவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அடுத்த 2 ஆண்டுகள் அவர்கள் ராணுவத்தில் சேவையாற்றுவார்கள்.

இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறியபோது, "கடந்த 1999 கார்கில் போரின்போது 3 ஆண்டுகளுக்கு குறைவான பணி அனுபவம் உடைய ராணுவ அதிகாரிகள், வீரர்களே மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். பெரும்பாலான இளைஞர்கள் சில ஆண்டுகள் மட்டும் ராணுவத்தில் இணைந்து பணியாற்ற விரும்புகின்றனர். தேசப்பற்று மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் '3 ஆண்டுபணி' திட்டத்தை தயார் செய்துள்ளோம். தற்போது பின்பற்றப்படும் உடல்திறன், கல்வித் தகுதியின் அடிப்படையிலேயே இளைஞர்கள் சேர்க்கப்படுவார்கள். அதில் எவ்வித சமரசமும் செய்யப்படாது. புதிய திட்டத்தில் ஓர் இளைஞர் 22 வயதில் ராணுவத்தில் இணைந்தால் 25 வயதில் ஓய்வு பெற்றுவிடுவார். புதிய ஆட்சேர்ப்பு திட்டம் தற்போது பரிசீலனையில் உள்ளது. விரைவில் அமலுக்கு வரலாம்" என்று தெரிவித்தன.

சிஏபிஎப் வீரருக்கு 7 ஆண்டு பணி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அசாம் ரைபிள்ஸ், எல்லை பாதுகாப்புப் படை, சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், இந்திய-திபெத் எல்லை போலீஸ், தேசிய பாதுகாப்புப் படை, சாஸ்த்ரா சீமா பால் ஆகியவை மத்திய ஆயுத போலீஸ் படைப்பிரிவு (சிஏபிஎப்) என்றழைக்கப்படுகிறது. இந்த படைப்பிரிவுகளின் வீரர்களை ராணுவத்தில் இணைக்கும் புதிய திட்டத்தை செயல்படுத்தவும் மத்திய பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி சிஏபிஎப் வீரர்கள், 7 ஆண்டுகள் வரை பணியாற்றுவார்கள். அதன்பின் அவரவர்சொந்த படைப்பிரிவுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

செலவு குறைவும்

ராணுவத்தின் குறுகிய கால சேவையில் ஓர் அதிகாரிக்கு சுமார் ரூ.6.8 கோடி வரை செலவாகிறது. 3 ஆண்டு பணி திட்டத்தில் ஓர் அதிகாரிக்கு ரூ.80 லட்சம் மட்டுமே செலவாகும். இதேபோல ஒரு ராணுவ வீரரின் 17 ஆண்டு கால சேவைக்கு ரூ.11.5 கோடி வரை செலவாகிறது. 3 ஆண்டு பணி திட்டத்தில் ரூ.80 லட்சம் வரை மட்டுமே செலவாகும்.

முன்னாள் ராணுவ வீரர்களின் ஓய்வூதியத்துகாக மத்திய பாதுகாப்பு பட்ஜெட்டில் 30 சதவீதம் வரை செலவிடப்படுகிறது. புதியஆட்சேர்ப்பு திட்டத்தை அமல்படுத்தினால் ராணுவத்தின் நிதிச் சுமை பெருமளவு குறையும். இந்த திட்டம் ராணுவம் மட்டுமன்றி கடற்படை, விமானப்படையிலும் அமல்படுத்தப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x