Last Updated : 14 May, 2020 05:50 PM

 

Published : 14 May 2020 05:50 PM
Last Updated : 14 May 2020 05:50 PM

28 நாட்களுக்குள் இந்தியா அழைத்து வரப்படுகிறாரா? விஜய் மல்லையாவுக்கு அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்தன: மல்லையா மனு உச்ச நீதிமன்றத்தில் தோல்வி

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று லண்டனில் வாழ்ந்து வரும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதற்கு எதிராக தொழிலதிபர் விஜய் மல்லையா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அவரது மனுவை ஏற்க நீதிமன்றம் மறுத்துவி்ட்டது. இதையடுத்து விஜய் மல்லையாவுக்கு இருந்த 3 சட்ட வாய்ப்புகளும் முடிந்துவிட்டன.

மதுபான ஆலை, விமான நிறுவனம் எனப் பல்வேறு தொழில்களை நடத்திய தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பி ஓடினார். அவரைத் தாயகம் அழைத்து வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கைது செய்தபோதிலும் சில மணிநேரத்தில் ஜாமீன் பெற்றார். அப்போதிருந்து ஜாமீனில் வெளியே இருக்கும் மல்லையா நீதிமன்றத்தில் தன்னை நாடு கடத்துவற்கு எதிரான வழக்கைச் சந்தி்த்து வருகிறார்.

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்துவரும் பணிகள் லண்டன் உச்ச நீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவுக்கு விஜய் மல்லையாவை அழைத்து வரும் தீவிரப் பணியில் அமலாக்கப் பிரிவினர், சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கெனவே லண்டன் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மல்லையா மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த லண்டன் உயர் நீதிமன்றம், மல்லையாவை நாடு கடத்தத் தடையில்லை எனக் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பு வந்த 20 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதால், உச்ச நீதிமன்றத்தி்ல் மல்லையா மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த இங்கிலாந்து உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதையடுத்து, இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க மல்லையாவுக்கு இருந்த கடைசி சட்ட வாய்ப்பும் முடிந்துவிட்டது. இதையடுத்து, அடுத்த 28 நாட்களுக்குள் இந்திய அரசு சார்பில் மல்லையாவைத் தாயகம் அழைத்துவரும் பணிகளைத் தொடங்கலாம்.

இந்தியாவுக்கு ஆதரவாக வாதாடிய சிபிஎஸ் சட்ட அலுவலகம் சார்பில் கூறுகையில், “தன்னை நாடுகடத்தும் உத்தரவுக்கு எதிராக விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுக்கள் 3 நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் இந்தியாவின் கருத்து ஏற்கெனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவி்க்கப்பட்டது

இப்போது மல்லையாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ஐரோப்பாவின் மனித உரிமை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தனது நாடு கடத்தும் திட்டத்தை ஒத்திவைக்கலாம். அதாவது தனக்கு நேர்மையான முறையில் விசாரணை நடக்கவில்லை, மனித உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டைக் கூறி மல்லையாவால் நிறுத்தப்படலாம்.

ஆனால், ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை நிரூபிப்பது எளிதானது அல்ல என்பதால் இதில் மல்லையா வெற்றி பெற மிகக்குறைவான வாய்ப்புதான் இருக்கிறது. விஜய் மல்லையாவின் வாதம் அனைத்தும் லண்டன் நீதிமன்றத்தில் தோல்வி அடைந்தது கணக்கில் கொள்ளப்பட்டால் அது சிக்கலாக மாறிவிடும்.

ஆதலால், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்துவரும் சிபிஐ, அமலாக்கப் பிரிவின் நடவடிக்கையில் இது முக்கிய மைல்கல்லாகும்.

இந்த சூழலில் கரோனா வைரஸ் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் இந்தியப் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார மீட்புத் தி்ட்டத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதைத் தொழிலதிபர் விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். மேலும், தன்னுடைய கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்று வழக்குகளைக் கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

விஜய் மல்லையா ட்விட்டரில் பதிவி்ட்ட கருத்தில், “கரோனா வைரஸிலிருந்து பொருளாதாரத்தை மீட்க இந்திய அரசு ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவித்ததமைக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இந்திய அரசு அவர்களின் தேவைக்கு ஏற்றார்போல் ரூபாய் நோட்டுகளை அச்சிடலாம்.

ஆனால், என்னைப் போன்ற சிறு பங்களிப்பாளர் 100 சதவீதம் கடனை வங்கிகளிடம் திருப்பிச் செலுத்துகிறேன் எனப் பலமுறை கோரிக்கை விடுத்தும் தொடர்ந்து புறந்தள்ளப்படுகிறது.

நான் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய அனைத்துக் கடன்களையும் செலுத்திவிடுகிறேன். நிபந்தனையில்லாமல் ஏற்றுக்கொண்டு, எனக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் கைவிடுங்கள் என மத்திய அரசிடம் கேட்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் தனக்குப் பாதகமான தீ்ர்ப்பு கிடைக்கும் என்பதால், முன்கூட்டியே பிரதமர் மோடியின் திட்டத்தைப் பாராட்டி, கடனைச் செலுத்தி விடுகிறேன் என்று ட்விட்டரில் விஜய் மல்லையா பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x