Last Updated : 29 Aug, 2015 03:15 PM

 

Published : 29 Aug 2015 03:15 PM
Last Updated : 29 Aug 2015 03:15 PM

ரக்‌ஷா பந்தன் நெகிழ்ச்சிப் பரிசு: காணாமல் போன தங்கை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் மீட்பு

சகோதரத்துவத்தின் அடையாளமாக நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் இன்று கொண்டாடப்படுகிறது. இவ்வேளையில், ராஜஸ்தானைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவனுக்கு மிகச் சிறந்த ரக்‌ஷா பந்தன் பரிசு கிடைத்துள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன தன் தங்கை நேற்று (வெள்ளிக்கிழமை) கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மகேஷ் என்ற சிறுவன்.

கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி நகாவுர் மாவட்டம் நவா நகரத்தில் நடந்த ஒரு திருவிழாவின்போது மகேஷின் சகோதரி மம்தா (அப்போது வயது 5) காணாமல் போனார்.

இது குறித்து மம்தாவின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர். அதே ஆண்டு ஏப்ரல் 11-ல் போலீஸார் எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். ஆரம்பத்தில் காணாமல் போனதாக பதியப்பட்ட வழக்கு பின்னர் ஆள்கடத்தல் வழக்காக பதிவு செய்யப்பட்டது.

மம்தா காணாமல் போவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் திருவிழாவில் பலூன்காரர் ஒருவருடன் காணப்பட்டதாக சாட்சிகள் தெரிவித்தன. ஆனால், அதன் பிறகு அந்த பலூன்காரரும் அங்கிருந்து காணாமல் போயிருக்கிறார். எனவே மம்தா கடத்தப்பட்டிருக்கலாம் என்பதால் ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால், அந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்கிடையில், மம்தாவை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களிலும் தேடினர்.

இந்நிலையில், கடந்த 2-ம் தேதி நகாவுர் மாவட்டத்தில் வேறு ஒரு பகுதியில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 குழந்தைகள் மீட்கப்பட்டன.

விசாரணையில், அவர்கள் அனைவரையும் அந்த நபர் பல்வேறு பகுதிகளிலிருந்து கடத்திவந்து பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தியிருந்தது தெரியவந்தது. குழந்தைகளை மீட்ட போலீஸார் அவர்களை காப்பகத்துக்கு அனுப்பிவைத்தனர். கைது செய்யப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இச்செய்தியை செய்தித்தாளில் படித்த மம்தாவின் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை அணுகினர். பின்னர் உரிய ஆவணங்களை ஒப்படைத்து மம்தாவை மீட்டனர். மம்தா நேற்று (வெள்ளிக்கிழமை) தனது குடும்பத்தாருடன் இணைந்தார்.

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு மம்தா அளித்த பேட்டியில், "என்னை கடத்திச் சென்ற நபர் என்னை பலநாள் அடித்து துன்புறுத்தியிருக்கிறார். என் எதிர்காலமே முடிந்துவிட்டது என நினைத்தேன். ஆனால் இப்போது என் குடும்பத்தாருடன் இணைந்திருக்கிறேன். என் படிப்பைத் தொடர விரும்புகிறேன்" என்றார்.

மம்தாவின் தாய் சீதா உப்பளத்தில் வேலை செய்கிறார். மகள் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் சீதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x