Published : 08 May 2020 09:15 PM
Last Updated : 08 May 2020 09:15 PM

‘‘நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்’’ - தொழில்துறையினருக்கு நிதின் கட்கரி வேண்டுகோள்

நேர்மறை எண்ணத்துடன் இருக்கும்படியும், தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு மேலாண்மைத் தொழிலையும், சிறு கடன் நிறுவனங்களையும் கட்கரி கேட்டுக்கொண்டுள்ளார்.

நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு மேலாண்மை சங்கப் பிரதிநிதிகளுடனும் கடன் தொழில் வளர்ச்சிக் குழுவின் உறுப்பினர்களுடனும், அவர்களது தொழிலில் கொவிட்-19 ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து, மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார்.

கலந்துரையாடலின் போது, கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக சிறு, குறு நடுத்தரத் தொழில்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கவலை தெரிவித்த பிரதிநிதிகள், சில ஆலோசனைகளைத் தெரிவித்ததுடன், தங்கள் துறை தொடர்ந்து இயங்குவதற்கு அரசின் ஆதரவைக் கோரினர்.

இந்தத் துறை சிறப்பாக இயங்கி வருவதாகத் தெரிவித்த கட்கரி, அவர்களது திறமையும், நோக்கமும் பரவலாக அங்கீகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். கொரோனாவுக்கு எதிராக நாம் போர் செய்து வருவதால், சிறு, குறு, நடுத்தரத் தொழில்களாக நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு மேலாண்மை தொழில் புரிவோர் தங்களைப் பதிவு செய்து கொண்டு அது தொடர்பான திட்டங்களில் இருந்து பலனடையுமாறுக் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு மேலாண்மையை சிறு, குறு, நடுத்தரத் தொழிலாகப் பதிவு செய்ய ஒரு பிரிவை அறிமுகப்படுத்துவது, சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு மாநில,மாவட்ட அளவில் பிரத்யேக அலுவலர்களை நியமிப்பதற்கான தேவை, நிதியைத் திரட்ட சிறு கடன் நிறுவனங்களுக்கு உதவி, தகுந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உத்தரவாதங்களைப் பெற சிறு கடன் நிறுவனங்களுக்குத் தேவையான கடன் மதிப்பீட்டை ரத்து செய்தல் உட்பட சில முக்கியமான விஷயங்கள் வலியுறுத்தப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

பிரதிநிதிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்த கட்கரி, முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார். தன்னுடைய அமைச்சகம் தொடர்பான அவர்களது கோரிக்கையை பரிசீலிப்பதாகக் கூறிய அவர், தொடர்புடைய இதர துறைகள்/அரசுகளுக்கும் அதை எடுத்து செல்வதாகத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x