Published : 30 Apr 2020 07:16 PM
Last Updated : 30 Apr 2020 07:16 PM

கரோனா பணியில் 92 ஆயிரம் தன்னார்வ அமைப்புகள்: மத்திய அமைச்சர் ஆலோசனை

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நிதிஆயோக் அமைப்பின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி அமிதாப் காந்த் ஆகியோர் பதிவு செய்துள்ள என்.ஜி.ஓ.க்கள் மற்றும் மக்கள் நல அமைப்புகளுடன் காணொலி மூலம் இன்று கலந்துரையாடினர்.

சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கு உணவு வழங்குதல் மற்றும் இதர தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஈடுபட்டுள்ள 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகளின் தன்னலமற்ற சேவைகளுக்கு பிரதமர் சார்பிலும், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பிலும் ஹர்ஷ் வர்த்தன் நன்றி தெரிவித்துக் கொண்டார். கோவிட்-19 நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைக் கையாள்வதில் இந்த அமைப்புகளின் பங்களிப்புகள் முக்கியமாக உள்ளதாக அவர் பாராட்டினார். இவர்களுடைய சேவையால், மக்களுக்கு உதவுதலுக்கு மற்றவர்களிடமும் உத்வேகம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் விளக்கினார். கோவிட்-19 நோய்த் தொற்றால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உலக சுகாதார நிறுவனம் போன்ற சர்வதேச அமைப்புகளுடன் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான திட்டங்களை வகுத்த முதல் நிலை நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது என்பதை அவர் மேன்மைப்படுத்திக் கூறினார். இந்திய அரசு முன்கூட்டியே, ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்து, சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கைகளை தீவிரப்படுத்திக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

முடக்கநிலைக்கு மக்களைத் தயார்படுத்தும் வகையில் முதலில் மக்கள் ஊரடங்கை அறிவித்து, அதன்பிறகு சூழ்நிலைக்கு ஏற்ப படிப்படியாக ஊரடங்கு நிலையை அமல் செய்ததன் மூலம் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் பிரதமருக்கு ஹர்ஷ் வர்த்தன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

``கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் படிப்படியாக அதிகரித்து வந்து இப்போது 12.5 நாட்களாக உள்ளது. முன்பு இது 3 நாட்களில் இரட்டிப்பாகும் என்ற நிலையில் இருந்தது. நாட்டில் முடக்கநிலை அமல் செய்த நடவடிக்கை, தொகுப்புகளாகப் பரவாமல் தடுக்கும் உத்திகளால் இது சாத்தியமானது'' என்று அவர் தெரிவித்தார்.

நாடு முழுக்க சிக்கித் தவித்த மக்களுக்கு உதவி செய்ததன் மூலம், பிரச்சினைகளைக் குறைக்க தன்னார்வலர்கள் உதவியதாக டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் பாராட்டினார்.

அமைச்சகம் வெளியிட்டுள்ள எளிதான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, கைகளை சுத்தமாக வைத்திருத்தல், முகக்கவச உறை அணிதல், நோய்த் தாக்குதல் ஆபத்து அதிகம் உள்ள மக்கள் மீது அதிக அக்கறை காட்டுதல், சாத்தியமான நேரங்களில் வீடுகளில் இருந்தே பணியாற்றுதல், முடக்கநிலை மற்றும் தனி நபர் இடைவெளி விதிகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றில் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். கோவிட்-19 நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பு மருந்தாக, தனி நபர் இடைவெளியும், பொது முடக்கமும் தான் இருக்கின்றன என்பதை அவர் மீண்டும் நினைவுபடுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x