Published : 27 Apr 2020 04:21 PM
Last Updated : 27 Apr 2020 04:21 PM

‘‘அபாயம் இன்னமும் முடியவில்லை; விழிப்புடன் இருக்க வேண்டும்’’ - பிரதமர் மோடி பேச்சு

வைரஸ் பாதிப்பின் அபாயம் இன்னும் முடிந்து விடவில்லை. தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி கூறினார்.

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினார். கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகள் எத்தகைய பலன்களை அளித்துள்ளன என்பது குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர்களிடம் பிரதமர் மோடி கருத்துக்களை கேட்டறிந்தார்.

நெருக்கடியான இந்த காலக்கட்டத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த தாங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் முதலமைச்சர்கள் எடுத்துக் கூறினர்.

சர்வதேச எல்லைகளில் தீவிர கண்காணிப்பு இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், பொருளாதார சவால்களை முறியடிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது குறித்தும், சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் முதல்வர்கள் பேசினர். கோவிட்-19 நோய்த் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் காவல் துறையினரும், மருத்துவ அலுவலர்களும் அற்புதமான சேவை செய்து வருவதாக முதல்வர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டதால் நல்ல பலன்கள் கிடைத்துள்ளது. கடந்த ஒன்றரை மாத காலத்தில் ஆயிரக்கணக்கான உயிர்களை நம்மால் காப்பாற்ற முடிந்துள்ளது. பல நாடுகளின் ஒட்டு மொத்த மக்கள் தொகை அளவுக்கு, அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.

மார்ச் மாத ஆரம்பத்தில் இந்தியா உள்பட பல நாடுகளில் நிலைமை ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. இருந்தபோதிலும், இந்தியாவில் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, நம்மால் அதிகமான உயிர்களைப் பாதுகாக்க முடிந்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பின் அபாயம் இன்னும் முடிந்து விடவில்லை. தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

இப்போது வரை நாட்டில் இரண்டு முறை ஊரடங்கு அமல்செய்யப்பட்டுள்ளன. இரண்டிலும் சில அம்சங்கள் மாறுபட்டுள்ளன, இப்போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். வரக் கூடிய மாதங்களில் கரோனா வைரஸ் தாக்கம் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இரண்டு மீட்டர் தூர இடைவெளி என்ற மந்திரத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். அடுத்த வரும் நாட்கள் முகக்கவச உறைகள் மற்றும் முகத்தை மூடும் துணிகள் நம் வாழ்வின் அங்கமாகிவிடும். இந்தச் சூழ்நிலையில், துரிதமான செயல்பாடு என்பது தான் எல்லோருடைய நோக்கமாக இருக்க வேண்டும். தங்களுக்கு இருமல் மற்றும் சளி அல்லது வேறு அறிகுறிகள் இருந்தால் மக்கள் தாங்களாகவே அதைத் தெரிவிக்கிறார்கள் என்று கூறிய அவர், அது வரவேற்க வேண்டிய விஷயம்.

நமது பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் தருவதுடன், கோவிட்-19 நோய்த் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளையும் தொடர வேண்டும். முடிந்த வரையில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சீர்திருத்த முயற்சிகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் நாட்டின் முயற்சிகளை பலப்படுத்தும் வகையில் நிறைய பேர் ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். நாம் தைரியமாக இருக்க வேண்டும். சாமானிய மக்களின் வாழ்வுக்குத் தேவையான வகையில் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். நோய்த் தாக்குதலை சமாளிக்கும் வழிமுறைகளை உருவாக்கவும், புதுமைச் சிந்தனை ஆராய்ச்சிகளைப் பலப்படுத்தவும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

நோய்த் தாக்குதல் அதிகமாக உள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகளில் - சிவப்பு மண்டலப் பகுதிகளில் - அரசின் வழிகாட்டுதல்களைக் கடுமையாகப் பின்பற்றுவதற்கு மாநிலங்கள் முக்கியத்துவம் தர வேண்டும். சிவப்பு மண்டலங்களை, ஆரஞ்சு மண்டலங்களாக மாற்றி, பிறகு அவற்றை பச்சை மண்டலங்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்து வருவது முக்கியமானது. அதேசமயம் அவர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்திவிடாத வகையிலும், அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆபத்தான எந்த சூழ்நிலையும் ஏற்பட்டுவிடாத வகையிலும், இந்தப் பணிகளை செய்ய வேண்டியுள்ளது.

பருவ மாற்றம் குறித்தும், கோடை மற்றும் பருவமழை குறித்து மாநில முதல்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற பருவங்களில் வரக் கூடிய நோய்கள் பற்றி அறிந்து அதற்காக முன்கூட்டியே திட்டங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x