Last Updated : 27 Apr, 2020 10:31 AM

 

Published : 27 Apr 2020 10:31 AM
Last Updated : 27 Apr 2020 10:31 AM

பெரும் கோடீஸ்வரர்களுக்கு கூடுதல் வரிவிதிக்க பரிந்துரை செய்த 50 இளம் ஐஆர்எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை? -விசாரணையை தொடங்கியது சிபிடிடி

பெரும் கோடீஸ்வரர்களுக்கு 40 சதவீதம் வருமானவரி விதிக்கலாம், கோவிட்-19 செஸ் வரியாக 4 சதவீதம் விதிக்கலாம் என்று அரசுக்கு வருவாயை உயர்த்த பரி்ந்துரை செய்த 50 இந்திய வருவாய் பணி(ஐஆர்எஸ்) அதிகாரிகளுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியுள்ளது மத்திய நேரடி வரிகள் வாரியம்(சிபிடிடி).

நிதியமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய நேரடி வரிகள் வாரியம், இதுபோன்ற பரிந்துரையை நாங்கள் கேட்கவில்லை. அவர்களாக தயாரித்து அளித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது

ஃபோர்ஸ் என்ற தலைப்பிலான (நிதி திரட்டும் ஆதார வழிகள் மற்றும் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கை)இந்த கொள்கைக் குறிப்பில் பல்வேறு பரிந்துரைகள் தரப்பட்டுள்ளன. கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை அரசு ஈடுகட்ட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய கடமை பெரும் பணக்காரர்களுக்கு உள்ளது என்றும் இத்தகைய பிரிவினருக்கு இரண்டு வழிகளில் வரி விதிக்கலாம். அதன்படி குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வரியாக விதிக்கலாம்.

ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு தற்போது 30 சதவீத வரியை 40 சதவீதம் வரை உயர்த்தலாம். அதேபோல ரூ.5 கோடிக்கு மேலான நிகர சொத்து மதிப்பு உள்ளவர்களுக்கு வரி விதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வரி விதிப்பு மூலம் அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் கூடுதலாகக் கிடைக்கும். இது தவிர அரசு முக்கிய 5 முதல் 10 திட்டங்களை கண்டறிய வேண்டும். இது பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையாக அமையும். இந்தத் திட்டங்களுக்கான செலவு மதிப்பை கணக்கிட்டு அதை அரசு இணையதளங்களில் வெளியிட வேண்டும்.

மக்களிடம் இருந்து கூடுதலாக திரட்டப்படும் நிதி ஆதாரம் முழுக்க முழுக்க இந்த 5 முதல் 10 திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்தப்படும் என்பதை உறுதியாக தெரிவிக்க வேண்டும். இந்தத் திட்டங்களுக்கு இதுநாள் வரை செலவிட்ட தொகையையும் அரசு தெரிவிக்க வேண்டும் என அந்த பரிந்துரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக கோவிட்-19 நிவாரண செஸ் என 4 சதவீதம் விதிக்கலாம். இதன் மூலம் ரூ.15 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.18 ஆயிரம் கோடி வரை கிடைக்கும் என கணக்கிட்டுள்ளது. ரூ.10 லட்சத்துக்கு அதிகமான வருமானம் ஈட்டுவோருக்கு மட்டும் விதிக்கலாம்.


ஏற்கெனவே கரோனா தொற்று பரவாமல் இருக்க எடுக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பொதுமக்களை மேலும் வதைக்காமல் இத்தகைய நடவடிக்கை மூலம் வருமானம் ஈட்டலாம் என அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை நேற்று சமூக ஊடகங்களில் பெரும் வைரலானது, அனைவராலும் பகிரப்பட்டது. இதையடுத்து உஷாரான மத்திய நேரடி வரிகள் வாரியம் இதுபோன்ற பரி்ந்துரைகளை நாங்கள் தயார் செய்யக்கோரி 50 ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடவில்லை. அவர்களும் தலைமையின் அனுமதியின்றி இதை செய்துள்ளார்கள் என்று தெரிவித்தது.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று இரவில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

இந்திய வருவாய் பணித்துறை அதிகாரிகள் அமைப்பிடம் இருந்து இதுபோன்ற அறிக்கையை நாங்கள் கேட்கவில்லை. இந்த அறிக்கையை தயாரிக்கக் கோரி நாங்கள் கேட்கவும் இல்லை, இதை பொதுவெளியில் வெளியிடும் முன் எங்களிடம் அனுமதியும் கோரவில்லை

எந்தவிதமான சந்தேகத்துக்கும் மத்திய நேரடி வரிகள் வாரியம் இதுபோன்ற அறிக்கையை, பரிந்துரைகளை அதிகாரிகளிடம் இருந்து கேட்கவில்லை. இதுபோன்ற அரசு அலுவல்சார்ந்த செய்திகளை மக்களுக்கு தெரிவிக்கம் போது அனுமதி பெற வேண்டும் அதையும் அவர்கள் கோரவில்லை. இந்த அறிக்கை தயாரித்ததில் ஏதே பின்புலம் இருக்கிறது, உள்நோக்கமும் இருக்கிறது. இது ஒழுக்க நெறிமுறைகளை மீறிய செயல் என்பதால், இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது

முன்னதாக நிதியமைச்சக வட்டராகங்கள் இந்த அறிக்கை குறித்து கூறுகையில் “ தவறான நோக்கத்துடன் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஒழுக்கக்கேடானது, அவர்களின் பணி விதிகளை மீறிய செயலாகும். இதுபோன்ற அறிக்கை தயாரிப்பது அவர்களின் பணியின் ஒரு பகுதி கூட இல்லை.

அரசின் அனுமதி பெறாமல் அரசு அலுவல் சார்ந்த விஷயங்களில் தங்களின் சொந்தக் கருத்தை ஊடங்களிடம் தெரிவித்தது விதிமுறைகளை, மீறியது இது ஒழுக்கக்கேடானது என்பதற்கு இதுவேமுகாந்திரம். இந்த ஒழுக்ககேடான செயலுக்கு சம்பந்தப்பட்ட 50 அதிகாரிகளும் விளக்கம் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தன

ஆனால், உண்மையில் இந்த அறிக்கையை கடந்த 23-ம் தேதி மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவரிடம் ஐஆர்எஸ் அதிகாரிகள் கூட்டமைப்பு தாக்கல் செய்துள்ளது. ஆனால், இ்ந்த அறிக்கையை ஊடகங்களிடமும், ட்விட்டரிலும் வெளியிட்டதுதான் சர்ச்சையாக மாறியுள்ளது.

இதற்கு இந்திய வருவாய் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் என்ன பதில்அளிக்கப்போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x