Last Updated : 25 Apr, 2020 06:35 PM

 

Published : 25 Apr 2020 06:35 PM
Last Updated : 25 Apr 2020 06:35 PM

சோதனைக் கருவிகளில் தவறான முடிவுகளா? வாய்ப்பே இல்லை; இந்திய ஏஜென்சிகளுடன் ஒத்துழைக்கத் தயார்:  சீன நிறுவனங்கள் பதில்

இந்தியாவுக்கு வழங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவுகளை காட்டுகின்றனவா? வாய்ப்பே இல்லை, வேண்டுமானால் இந்திய அரசுத்துறை ஏஜென்சிகளுடன் ஒத்துழைக்கத் தயார் என்று சீன நிறுவனங்கள் பதில் கூறியுள்ளன.

இரண்டு சீன மருந்து நிறுவனங்களிடமிருந்து கடந்த வாரம் வாங்கிய கோவிட் 19க்கான 5.5 லட்சம் விரைவான சோதனை கருவிகள் தவறான முடிவுகளைக் காட்டியதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களை அந்நிறுவனங்கள் இன்று மறுத்துள்ளன.

இந்தியாவுக்கு வழங்கிய தங்கள் தயாரிப்புகள் தவறான முடிவுகளைக் காட்டுவதாக வந்த குற்றச்சாட்டுகளை ஆராயும் இந்திய நிறுவனங்களுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகக அந்நிறுவனங்கள் கூறியுள்ளன.

இந்தியாவுக்கு பதிலளித்துள்ள குவாங்சோ வோண்ட்ஃபோ பயோடெக் மற்றும் லிவ்ஸன் டயக்னாஸ்டிக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் அறிக்கைகளையும் இந்தியாவில் உள்ள சீன தூதரக அதிகாரி ஒருவர் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டார்.

தனித்தனி அறிக்கைகளில், குவாங்சோ வோண்ட்ஃபோ பயோடெக் மற்றும் லிவ்ஸன் டயக்னாஸ்டிக்ஸ் ஆகியவை தங்கள் தயாரிப்புகளின் கடுமையான தரக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுகின்றன என்று கூறின, துல்லியமான முடிவுகளைப் பெறுவதற்கு கிட்களை சேமித்து வைப்பதிலும் அவற்றின் பயன்பாடுகளிலும் குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

கடந்த வாரம், இந்தியா இந்த இரண்டு சீன நிறுவனங்களிடமிருந்து 5.5 லட்சம் விரைவான ஆன்டிபாடி சோதனைக் கருவிகளை வாங்கியது, மேலும் அவை பல மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

குவாங்சோ வோண்ட்ஃபோ பயோடெக் 3 லட்சம் சோதனை கருவிகளை வழங்கியபோது, ​​லிவ்ஸன் டயக்னாஸ்டிக்ஸ் 2.5 லட்சத்தை வழங்கியது.

இதுகுறித்து லிவ்ஸன் டயக்னாஸ்டிக்ஸ், தனது அறிக்கையில் கூறியதாவது:

"எங்கள் பிராண்ட் உட்பட சீனாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் 19 விரைவான சோதனைக் கருவிகளின் தவறான முடிவுகள் காட்டியதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து எதிர்மறையான அறிக்கைகளைப் பெறுவதில் நாங்கள் அதிர்ச்சியடைகிறோம். இந்த விஷயத்தில் நாங்கள் மிகுந்த அக்கறை காட்டியுள்ளோம், தொடர்புடைய அரசு துறைகளுடன் விசாரணைக்கு மேலும் நாங்கள் ஒருங்கிணைய தயாராக இருக்கிறோம்.

சீன அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து தரக் கட்டுப்பாட்டுத் தரங்களையும் நாங்கள் பூர்த்தி செய்துள்ளோம், பிரேசில், பெரு, கொலம்பியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உட்பட குறைந்தது 10 நாடுகளுக்கு இந்த தயாரிப்பு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

சோதனைக் கருவிகள் 2 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டும், அவைகள் உறைந்து விடக்கூடாது ... சேமிப்பக வெப்பநிலை அதிகமாக இருந்தால், சோதனையின் துல்லியம் பாதிக்கப்படலாம்.

இவ்வாறு லிவ்ஸன் டயக்னாஸ்டிக்ஸ் தெரிவித்துள்ளது.

அதேபோல இந்தியாவுக்கு சோதனைக் கருவிகள் சப்ளை செய்த, இன்னொரு நிறுவனமான குவாங்சோ வோண்ட்ஃபோ பயோடெக் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது:

எங்கள் நிறுவனம் 70 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கிட்களை ஏற்றுமதி செய்து வருவகிறது, புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் மூலம் இந்த தயாரிப்பு ஐ.சி.எம்.ஆரால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

தயாரிப்புகளை வெளிநாட்டு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியில், எங்கள் தயாரிப்புகளின் உணர்திறன் மற்றும் தனித்தன்மை குறித்து பல்வேறு சரிபார்ப்புகளை மேற்கொள்ள ஒவ்வொரு நாட்டிலும் தொடர்புடைய சுகாதார அதிகாரிகளுடன் வோண்ட்ஃபோ முழுமையாக ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இந்திய அதிகாரிகள் விரும்பினால் நாங்கள் இதுகுறித்த விசாரணையில் ஒத்துழைக்க விரும்புகிறோம்"

இவ்வாறு குவாங்சோ வோண்ட்ஃபோ பயோடெக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x