Last Updated : 12 Aug, 2015 09:13 PM

 

Published : 12 Aug 2015 09:13 PM
Last Updated : 12 Aug 2015 09:13 PM

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தினால் வறுமை குறைந்துள்ளது

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தினால் 32% வறுமை குறைக்கப்பட்டதாகவும், சுமார் 1 கோடியே 40 லட்சம் பேர் வறுமையின் பிடியில் சிக்காமல் காப்பாற்றப்பட்டும் உள்ளனர் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் நடைமுறைப்படுத்தல் பொருளாதார ஆய்வு தேசியக் குழு ஆகியவை இணைந்து இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்காக 2004-05 மற்றும் 2011-12-ம் ஆண்டுகளின் இந்திய மானுட வளர்ச்சி ஆய்வின் இரண்டு சுற்று தரவுகளை பயன்படுத்தியுள்ளனர். நடைமுறைப்படுத்தல் பொருளாதார தேசிய ஆய்வுக் குழு மற்றும் மேரிலேண்ட் பல்கலைக் கழகமும் சுமார் 26,000 இந்திய ஊரகப் பகுதிகளைக் கொண்டு இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

இந்திய மானுட வளர்ச்சிக் குறியீடு ஆய்வின் 2 சுற்று ஆய்வுகளை ஒப்பு நோக்கியபோது, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் 32% வறுமையை ஒழித்திருப்பதும், சுமார் 1 கோடியே 40 லட்சம் பேர் வறுமைக்குள் தள்ளப்படாமல் தடுக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் முதன்மை வகித்த சோனால்டே தேசாய் கூறும் போது, “இந்தக் காலக்கட்டங்களில் பொருளாதார வளர்ச்சி வறுமை குறைப்பில் பங்களிப்பு செய்தது என்றும், ஆனாலும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டமும் இதில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்துள்ளது” என்றார்.

மேலும், பெண்கள் பலருக்கு ரொக்க வருவாய் வாய்ப்பையும் இத்திட்டம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக இந்த ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இந்த அறிக்கை மேலும் குறிப்பிடுவதாவது, “மேல்தோற்றத்தில் ஊரக வேலைவாய்ப்புகளில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் பெரிய தாக்கம் செலுத்தவில்லை என்று தெரியும் ஏனெனில் தனிநபர் வேலை செய்யும் நாட்களில் பெரிய முன்னேற்றம் காண்பிக்கவில்லை, ஆனால், முன்பு பயனற்ற பணிகளில் ஈடுபட்டிருந்தோரை இத்திட்டம் பெருமளவு ஈர்த்து அவர்களது வருவாய் முன்னேற்றத்துக்கு உதவியுள்ளது என்று தெரிகிறது.

மொத்தத்தில் 2004-05 முதல் 2011-12 ஆம் ஆண்டு வரை ஊரக கூலியில் கூர்மையான ஒரு உயர்வு ஏற்பட்டுள்ளது. இதில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஒரு மிதமான பங்கைச் செலுத்தியுள்ளது என்று இந்த அறிக்கை கூறுகிறது.

மகளிர் வேலைவாய்ப்பில் இத்திட்டம் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செய்துள்ளது. 2004-05-ல் 45% மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெண் தொழிலாளர்கள் ஒன்று வேலையில்லாமல் இருந்துள்ளனர், அல்லது குடும்பப் பண்ணைகளில் இருந்துள்ளனர். எனவே இந்தத் திட்டத்தில் ரொக்கப் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பை இந்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் உருவாக்கிக் கொடுத்துள்ளது. இதனால் பெண்களிடம் கையில் ரொக்கமும், வங்கிக் கணக்கு தொடங்கும் நடவடிக்கையும் கூட உருவாகியுள்ளது. மேலும் தங்களது உடல் ஆரோக்கியம் குறித்து தனிப்பட்ட முடிவுகளை பெண்கள் எடுக்கவும் இத்திட்டம் வழிவகுத்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

இதை விட முக்கியமாக, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தினால் பயனடைந்த குடும்பங்களில் குழந்தைகள் ஓரளவுக்கு உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறும் சாத்தியங்கள் கூட இருந்தன என்று கூறுகிறது இந்த அறிக்கை.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தினால் பயனடைந்த குடும்பங்கள் வட்டிக்கு கடன் வாங்குவதும் குறைந்துள்ளது. ஆனால் முறையான கடன் வாங்குவதற்கான அணுக்கங்கள் அதிகரித்தன என்கிறது இந்த அறிக்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x