Published : 23 Apr 2020 04:05 PM
Last Updated : 23 Apr 2020 04:05 PM

கரோனா ஊரடங்கு- கரீப் கல்யாண் நிவாரணம்: 33 கோடி பேருக்கு ரூ.31235 கோடி: மத்திய அரசு நடவடிக்கை

பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்பு நிவாரணத் திட்டத்தின் கீழ் இதுவரையில் (2020 ஏப்ரல் 22 வரையில்) ஏழை மக்கள் 33கோடிக்கும் அதிகமானோருக்கு ரூ.31,235 கோடி நிதியுதவி வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டுள்ளது.

கரோனா தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்பு நிவாரணத் திட்டத்தின் கீழ் பெண்கள், ஏழைகள், மூத்த குடிமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ரொக்கமாகப் பணம் வழங்குதல், இலவசமாக உணவு தானியங்கள் வழங்கும் திட்டங்களை அரசு அறிவித்தது.

இந்தத் தொகுப்பு நிவாரணத் திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்படுவதை மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணிக்கின்றன. உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு, நிவாரண உதவிகள் சென்று சேருவதை உறுதிசெய்வதற்கு, நிதியமைச்சகமும், தொடர்புடைய அமைச்சகங்களும், அமைச்சரவைச் செயலகமும், பிரதமர் அலுவலகமும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.

பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்பு நிவாரணத் திட்டத்தின் கீழ் 2020 ஏப்ரல் 22 ஆம் தேதி வரையில் பயனாளிகளுக்கு பின்வரும் நிதி உதவிகள் (ரொக்கமாக) வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

பயனாளிகளுக்கு விரைவாக, நல்ல முறையில் பணம் செலுத்துவதற்காக Fintech மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது. நேரடியாக பயனாளி கணக்கில் பணம் செலுத்தும் திட்டத்தில் (DBT), பயனாளிகளின் கணக்கிற்கே பணம் செலுத்தப்படுவதால், தவறானவர்களின் கைகளுக்குப் பணம் போய்விடாமல் தடுக்கப்பட்டு, திட்டத்தின் செயல் திறன் அதிகரிக்கப் படுகிறது. பயனாளி, வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், நேரடியாக அவருடைய கணக்கில் பணம் செலுத்துவது உறுதி செய்யப்படுகிறது.

ஏப்ரல் மாதத்துக்கான ஒதுக்கீடு 40 லட்சம் மெட்ரிக் டன்கள் என்ற நிலையில், இதுவரையில் 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் 40.03 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உணவு தானியங்கள் பெறப்பட்டுள்ளது. 31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 1.19 கோடி ரேஷன் அட்டை வைத்திருக்கும், 39.27 கோடி பயனாளிகளுக்கு ஏப்ரல் மாதத்துக்கான பொருள்களாக 19.63 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.

* பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 1,09,227 மெட்ரிக் டன் அளவுக்கு பயறு வகைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

* பிரதமரின் உஜ்வாலா யோஜ்னா திட்டத்தின் கீழ் மொத்தம் 3.05 கோடி சிலிண்டர்களுக்குப் பதிவு செய்யப்பட்டு, 2.66 கோடி இலவச சிலிண்டர்கள் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

* தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிலுவையில் 75% அல்லது 3 மாத சம்பளம், இவற்றில் எது குறைவோ அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லாத முன்பணமாகப் பெறும் வசதி

* ழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் 6.06 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் ரூ.1954 கோடி எடுத்துள்ளனர்.

* 3 மாதங்களுக்கு ஈ.பி.எப். பங்களிப்பு: 100 பேருக்கும் குறைவான தொழிலாளர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களில் ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவாக மாதச் சம்பளம் வாங்கும் தொழிலாளர்களுக்கான ஊதியத்தில் 24 சதவீதத்துக்கான தொழிலாளர் ஈட்டுறுதி சந்தா பங்களிப்பு 3 மாதங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் 2020 ஏப்ரல் மாதத்துக்கான பங்களிப்பாக அரசு ஏற்கெனவே ரூ.1000 கோடி அளித்துள்ளது. இதன் மூலம் 78.74 லட்சம் பேர் பயன் பெறுவார்கள். இதற்கான அறிவிப்பு, அடிக்கடி எழும் கேள்விகள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.

இதுவரையில் 10.6 லட்சம் தொழிலாளர்கள் ரூ.162.11 கோடி அளவுக்குப் பயன் பெற்றுள்ளனர். 68,775 நிறுவனங்களுக்கு இந்தத் தொகை அளிக்கப் பட்டுள்ளது.

* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 01.04.2020 தேதியில் இருந்து ஊதியம் அதிகரிப்பு குறித்து அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 1.27 கோடி மனித உழைப்பு நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சம்பளம் மற்றும் பொருட்கள் நிலுவையை அளிக்கும் வகையில் ரூ.7300 கோடி வழங்கப்பட்டுள்ளது.

* அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் பணிபுரியும் சுகாதார அலுவலர்களுக்கான காப்பீட்டுத் திட்டம். 22.12 லட்சம் சுகாதார அலுவலர்கள் பயன்பெறும் வகையிலான இந்தத் திட்டத்தை நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம் அமல்படுத்துகிறது.

* மொத்தமாக வழங்கப்பட்ட நிதியில் ரூ.16,146 கோடி பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் முதலாவது தவணைக்காக அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 8 கோடி பேருக்கும் அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் தலா ரூ2000 செலுத்தப் பட்டுள்ளது.

* இந்தியாவில் பெரும்பாலான வீடுகளை பெண்கள் தான் நிர்வகித்து வருகிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் 20.05 கோடி பெண்களுக்கு வங்கிக் கணக்குகளில் தலா ரூ.500 செலுத்தப் பட்டுள்ளது. 22 ஏப்ரல் 2020 தேதியின்படி இந்தத் தலைப்பில் மொத்தம் ரூ.10,025 கோடி வழங்கப்பட்டுள்ளது.

* தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் 2.82 கோடி முதியோர், விதவையர், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,405 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயனாளிக்கும் முதலாவது தவணையாக ரூ.500 வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் மற்றொரு தவணையாக தலா ரூ.500 வழங்கப்படும்.

* கட்டடம், இதர கட்டுமானத் தொழிலாளர்கள் 2.17 கோடி பேருக்கு, கட்டடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர் நிதியில் இருந்து உதவித் தொகை அளிக்கப் பட்டுள்ளது. இத் திட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.3,497 கோடி அளிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x