Last Updated : 19 Apr, 2020 02:37 PM

 

Published : 19 Apr 2020 02:37 PM
Last Updated : 19 Apr 2020 02:37 PM

அறிகுறி இல்லாத கரோனா நோயாளிகள் டெல்லியில் இருப்பது கவலை; லாக் டவுன் நீக்கப்படாது: முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு

முதல்வர் கேஜ்ரிவால் காணொலி மூலம் பேட்டி அளித்த காட்சி : படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி

டெல்லியில் அறிகுறி இல்லாத (Asymptomatic) கரோனா நோயாளிகள் இருப்பது கவலையளிக்கிறது. கரோனாவும் தொடர்ந்து பரவுவதால், லாக் டவுன் நீக்கப்படாது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கவலை தெரிவித்தார்.

கரோனா வைரஸின் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனாவுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் டெல்லியைப் பொறுத்தவரை அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,893 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆகவும் அதிகரித்துள்ளது. இதில் உயிரிழந்த 43 பேரில் 24 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். அதாவது 55 சதவீதம் இந்த வயதினர்தான். 50 முதல் 60 வயதுவரை 9 பேர், 50 வயதுக்குக் கீழானவர்கள் 10 பேர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், டெல்லியைப் பொறுத்தவரை கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் 76 ஆக உயர்ந்துள்ளது. இந்த சூழலில் நாளை முதல் கரோனா தாக்கம் குறைந்த இடங்களில் விதிமுறைகளைத் தளர்த்தலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதைப் பின்பற்றி பல்வேறு மாநிலங்கள் கரோனா பாதிக்காத பகுதிகளை அடையாளம் கண்டு வருகின்றன.

இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று காணொலி மூலம் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :

''கரோனா வைரஸ் பரவும் வேகம் டெல்லியில் குறையவில்லை. இன்னும் ஒருவாரத்துக்குப் பின் சூழலை மீண்டும் ஆய்வு செய்வோம். வைரஸ் தீவிரமாகப் பரவுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட இடங்களிலும் பரவுகிறது. ஆனால், சூழல் கட்டுக்குள்தான் இருக்கிறது என நம்புகிறேன்.

டெல்லியையும், டெல்லி மக்களையும் பாதுகாப்பாக வைக்க விரும்புகிறேன். ஆதலால் லாக் டவுன் தொடரும், லாக் டவுன் தளர்த்தல் ஏதும் இருக்காது. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் நேற்று உறுதி செய்யப்பட்ட 186 கரோனா நோயாளிகள் அனைவரும் அறிகுறி இல்லாத நோயாளிகள். இதுதான் கவலையளிக்கக்கூடியது. அவர்களுக்கு கரோனா வைரஸ் இருந்தது அவர்களுக்கே தெரியாது. இவர்கள் சென்ற இடங்கள், பேசிய நபர்கள் அனைவரும் இனிமேல் பரிசோதிக்க வேண்டும்

இலவசமாக உணவும் வழங்கும் இடத்துக்கு ரேபிட் டெஸ்ட் மருத்துவக் குழுவை அனுப்பப் போகிறோம். அவர்களுக்கு உணவை வழங்கிவிட்டு அங்கேயே மருத்துவப் பரிசோதனையும் நடக்கும்'' எனத் தெரிவித்தார்.

ஆயிரம் ரூபாய் அபராதம்

இதற்கிடையே டெல்லியில் மக்கள் பொது இடங்களில் சிறுநீர் கழித்தாலோ, எச்சில் துப்பினாலா ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்புவது தண்டனைக்குரிய குற்றம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x