Last Updated : 10 Apr, 2020 03:17 PM

 

Published : 10 Apr 2020 03:17 PM
Last Updated : 10 Apr 2020 03:17 PM

மகாராஷ்டிராவில் ஒரு நம்பிக்கை மாவட்டம்: சாங்லியில் 22 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் பாராட்டு

கொடிய கரோனா வைரஸ் தாக்கத்தால் மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் சாங்லி மாவட்டத்தில் 22 பேர் குணமடைந்ததற்கு மகாராஷ்டிர அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலகையே நடுநடுங்க வைத்துள்ள கரோனா வைரஸ் இந்தியாவுக்குள்ளும் ஊடுருவி இதுவரை 6 ஆயிரத்திற்கும் அதிகமானோரை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கியுள்ளது. 200க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகியுள்ளனர்.

நாட்டிலேயே அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் 1390 பேருக்கு கோவிட்-19 தொற்று உள்ளது. இங்கு நேற்று ஒருநாள் மட்டும் 25 பேர் பலியாகியுள்ளனர். மகாராஷ்டிராவில் இதுவரை ஏற்பட்ட கரோனா பலி எண்ணிக்கை 100-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஒரு நம்பிக்கை மாவட்டமாக சாங்லி திகழ்வதாக அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான ஜெயந்த் பாட்டீல் ஃபேஸ்புக்கில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் இன்று ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

''மாவட்டத்தில் உள்ள 26 பேருக்கு நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டன. சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் 22 பேர் குணமடைந்துள்ளனர்.

சாங்லி மாவட்டத்தில் 26 நோயாளிகளில் 22 பேர் குணமாகி வீடு திரும்பியதற்குக் காரணமான உள்ளூர் நிர்வாகத்தையும் குடிமக்களையும் அவர்கள் செய்த முயற்சிகளுக்காகப் பாராட்டுகிறேன்.

சாங்லி மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாம்பூரில் 25 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது முன்பு உறுதிப்படுத்தப்பட்டது. இதே மாவட்டத்தைச் சேர்ந்த வாட்கானில் ஒரு கோவிட் -19 நோயாளி இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து இஸ்லாம்பூர் தனிமைப்படுத்தப்பட்டது.

பரவலைக் கட்டுப்படுத்த இஸ்லாம்பூரில் தனிமைப்படுத்தல், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுதல் மற்றும் சமூக விலகல் ஆகிய மும்முனை அணுகுமுறை பின்பற்றப்பட்டது. இது தொற்றுநோயைத் தோற்கடிப்பதற்கான இஸ்லாம்பூர் முறை ஆகும்.

மாவட்டத்தில் சிற்சில இடங்களில் தனிமைப்படுத்தும் சோதனைகள் நடத்தப்பட்டன. அதில் இஸ்லாம்பூரில் 100 சதவீத வெற்றி என்பதை உறுதி செய்ததற்காக இஸ்லாம்பூர் மற்றும் சாங்லி மக்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசாங்க அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் மக்களின் ஒத்துழைப்புடன் கரோனா வைரஸ் பரவுவதை எங்களால் கட்டுப்படுத்த முடிந்தது என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சாங்லி மாவட்டத்தில் தற்போது கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இப்போது முழுமையாக குணமடைந்துள்ளன".

இவ்வாறுவ்ஜெயந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x