Last Updated : 08 Aug, 2015 09:16 AM

 

Published : 08 Aug 2015 09:16 AM
Last Updated : 08 Aug 2015 09:16 AM

லலித் மோடிக்கு உதவிய விவகாரம்: அமைச்சர் சுஷ்மா ‘சிறந்த நாடக கலைஞர்’ - சோனியா காந்தி கடும் தாக்கு

‘‘மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சிறந்த நாடக கலைஞர். நாடாளுமன்றத்தில் சிறப்பாக நடிக்கிறார்’’ என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு பிரிட்டன் அரசு விசா வழங்கிய விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா உதவியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இல்லாத நேரத்தில் நேற்றுமுன்தினம் சுஷ்மா உணர்ச்சிகரமாக விளக்கம் அளித்தார். அப்போது, ‘‘லலித் மோடிக்கு உதவவில்லை. அவருடைய மனைவியை பார்க்க லலித் மோடிக்கு விசா வழங்கினால், அதனால் இந்தியா - பிரிட்டன் உறவு பாதிக்காது. உங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றுதான் கூறினேன். என் நிலையில் சோனியா காந்தி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார். லலித் மோடியின் மனைவியை சாகவிட்டிருப்பாரா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து 4-வது நாளாக காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட கட்சி உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, சுஷ்மா ஸ்வராஜின் கேள்வி குறித்து சோனியா காந்தி கூறும்போது, ‘‘அமைச்சர் சுஷ்மா நாடகமாடுகிறார். அவர் சிறந்த நாடக கலைஞராக திகழ்கிறார். என் நிலையில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று சுஷ்மா கேள்வி எழுப்பி உள்ளார். என்னால் என்ன உதவி செய் திருக்க முடியுமோ அதை செய்திருப்பேன். அதற்காக சட்டத்தை மீறியிருக்க மாட்டேன்’’ என்றார்.

ராகுல் காந்தி கூறுகையில், ‘‘மக்களவையில் எதிர்க்கட்சியினர் இல்லாத போது சுஷ்மா பேசியிருக்கிறார். அது வெற்று பேச்சு.

லலித் மோடியிடம் இருந்து எவ்வளவு பணம் பெற்றார்கள் என்பதை சுஷ்மா தெரிவிக்க வேண்டும். ரகசியமாக என்ன நடந்தது என்பதை அவர் விளக்க வேண்டும். சுஷ்மா என்ன செய்தார் என்றால், லலித் மோடி விஷயத்தில் ரகசியம் காத்து வருகிறார். தன்னுடைய வெளியுறவுத் துறை அமைச்சகத்தை இருட்டறையில் வைத்துள்ளார்.

எனவே, லலித் மோடியிடம் இருந்து சுஷ்மா, அவரது மகள், அவரது கணவர் எவ்வளவு பணம் பெற்றார்கள் என்பதை இந்த நாட்டு மக்களுக்கு அவர் தெரிவிக்க வேண்டும். என்னுடைய அம்மா அவரை போல் செயல்பட்டிருக்க மாட்டார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x