Published : 07 Apr 2020 21:26 pm

Updated : 07 Apr 2020 21:27 pm

 

Published : 07 Apr 2020 09:26 PM
Last Updated : 07 Apr 2020 09:27 PM

கரோனா வைரஸ் பாதிப்பை எப்படி எதிர்கொள்ளலாம்? - நிதி சிக்கனம்:  பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி 5 ஆலோசனைகள்

coronavirus
கோப்புப் படம்

புதுடெல்லி

கரோனா வைரஸின் சவால்களை எதிர்கொள்ள ஆலோசனைகளை தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

கோவிட் 19 எனப்படும் கரோனா வைரஸின் சவால்களை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆலோசனைகளை தெரிவிக்குமாறு நேற்று என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தீர்கள். அதன் அடிப்படையிலான உந்துதலில் தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

இந்த கடிதம் மூலம் தங்கள் நலத்தையும் அறிய விரும்புகின்றேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை 30 சதவீதம் குறைக்க மத்திய கேபினட் எடுத்துள்ள முடிவுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிக்கன நடவடிக்கையின் காரணமாக, இந்த பணம் கோவிட் 19 ஐ எதிர்த்துப் போராட தேவைப்படும். இந்த நேரத்துக்கு இது மிக அவசிமானதாகும். வலுவான 5 ஆலோசனைகளை நான் இந்த கடிதம் வாயிலாக அளிக்கிறேன். இதில் முக்கியமானது எது என்பதை நீங்கள் கண்டறிந்து கொள்ளலாம்.

முதலாவதாக, அடுத்த 2 ஆண்டுகளுக்கு அரசு மற்றும் அரசு பொது நிறுவனங்களின் விளம்பரங்களை தொலைக்காட்சி, பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்களுக்கு வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும். மக்களின் பொது சுகாதாரம் தொடர்பான கோவிட் 19 குறித்த விளம்பரங்களுக்கு விலக்கு அளிக்கலாம். விளம்பரங்களை தடை செய்வதன் மூலம் மத்திய அரசு செலவு ஆண்டுக்கு சராசரியாக செலவு செய்யும் ஆயிரத்து 250 கோடி ரூபாயை மிச்சப்படுத்தலாம். ( அரசும், அரசு பொது நிறுவனங்களும் இந்த தொகைக்கு இணையாகவோ அல்லது இதற்கு அதிகமாகவோ செலவு செய்யக் கூடும்.) இந்த தொகை கோவிட் 19 பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக பாதிப்புகளை குறைக்கும்.

இரண்டாவதாக, அழகுபடுத்துதல் மற்றும் கட்டுமான திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 20 ஆயிரம் கோடி ரூபாயை ரத்து செய்ய வேண்டும். இந்த நேரத்தில் இது தேவையா என்ற விமர்சனங்களை இது போன்ற நிதி ஒதுக்கீடு எழுப்பக்கூடும். மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க தற்போதைய கட்டிடத்திலேயே நாடாளுமன்றம் தொடர்ந்து வசதியாக செயல்படலாம்.

இந்த பிரச்சினை தீரும் வரை, புதிய கட்டிடத்தை கட்ட வேண்டிய அவசரமோ அல்லது தேவையோ ஏற்படவில்லை. இதற்கு செலவிடும் தொகையை புதிய மருத்துவமனைகள் கட்டவும், பரிசோதனை மையங்கள் அமைக்கவும், சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவும் பயன்படுத்தலாம்.

மூன்றவதாக, மத்திய பட்ஜெட் செலவினங்களையும் சரி விகிதத்தில் 30 சதவீதம் குறைக்க வேண்டும். ( ஊதியம், ஓய்வூதியம் மற்றும் மத்திய அரசு துறைகளின் திட்டங்கள் தவிர). இந்த 30 சதவீதத்தை ( அதாவது, தோராயமாக 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்) புலம்பெயரும் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் பொருளாதார வலையை கட்டமைக்க பயன்படுத்தலாம்.

நான்காவதாக, பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரின் வெளிநாட்டு பயணங்களை நிறுத்தி வைக்க வேண்டும். நாட்டின் நலன் தொடர்பான முக்கிய பயணமாக இருந்தால், பிரதமரின் அனுமதியை பெற வேண்டும். இது கோவிட் 19 க்கு எதிரான போரை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்.

ஐந்தாவதாக, பிரதமர் நல நிதியில் உள்ள அனைத்து பணத்தையும் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு மாற்றவேண்டும். இதன்மூலம் திறமை வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை, கணக்கு தணிக்கை வெளிப்படும். இதன்மூலம் வீண் முயற்சிகளும், மனித ஆற்றல் வீணாவதும் தடுத்து நிறுத்தப்படும். சராசரியாக பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய் இருப்பதாக அறிகிறேன். ( 2019 ஆம் ஆண்டு நிதி ஆண்டின் இறுதி வரை). இந்த தொகையும், பிரதமரின் நல நிதியும் சமுதாயத்தில் வறுமையில் வாடும் மக்களின் உணவு பாதுகாப்பு வலையை உடனடியாக வலுப்படுத்தும்.

இந்த நோயை எதிர்த்துப் போராட ஒவ்வொரு இந்தியரும் பெரும் தியாகத்தை செய்துள்ளார்கள். மத்திய அரசின் ஆலோசனை மற்றும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டே இத்தகைய தியாகத்தை செய்துள்ளார்கள். மக்கள் பிரதிநிதித்துவ சபையும், நிர்வாகமும் நம்பிக்கையையும், நல்ல எண்ணத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டிய நேரம் இது.

நாட்டை எதிர்கொண்டுள்ள கோவிட் 19&க்கு எதிரான சவால்களை எதிர்கொள்ள எல்லையில்லா ஆதரவை அளிப்போம் என தங்களுக்கு உறுதி அளிக்கின்றேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.


அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

#coronavirusகரோனா வைரஸ் பாதிப்பை எப்படி எதிர்கொள்ளலாம்நிதி சிக்கனம்பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி ஐந்து ஆலோசனைகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author