Published : 21 Mar 2020 09:59 PM
Last Updated : 21 Mar 2020 09:59 PM

கரோனா வைரஸ் தடுப்பு; மறந்து விடாதீர்கள்; பீதியல்ல- முன்னெச்சரிக்கை: பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தல்

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே தங்கி இருப்பது அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதிவரை திறக்கத் தடை விதித்தது.

மேலும், வரும் 22-ம் தேதி மக்கள் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். மார்ச் 22-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தநிலையில் பிரதமர் மோடி இன்று மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில் ‘‘கரோனா வைரஸ் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் தவிர்க்க வேண்டியது மிக அவசியம். நாட்டு மக்கள் அனைவரும் சில நாட்களுக்காவது வீட்டிலேயே தங்கியிருப்பதன் மூலம் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க முடியும்.


மக்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே இருங்கள். எங்குள் செல்லாதீர்கள். பேருந்து, ரயில்களில் பயணம் செய்வதன் மூலம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கரோனா வைரஸ் பரவ வாய்ப்புண்டு.

உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை பற்றி எண்ணுங்கள். உடல்நலம் மிக முக்கியம் ஆகேவே வீடுகளிலேயே தங்கியிருங்கள். மறந்து விடாதீர்கள், பீதியல்ல முன்னெச்சரிக்கை. வீடுகளில் இருப்பதுமட்டுமின்றி இருக்கும் நகரத்தை விட்டு வேறு ஊர்களுக்குச் செல்லாதீர்கள்.’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x