Published : 15 Mar 2020 07:54 AM
Last Updated : 15 Mar 2020 07:54 AM

கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரில் 56.6% பேர் குணமடைந்துள்ளனர்- அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தகவல்

கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரில்56.6% பேர் குணமடைந்துள்ளனர்அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தகவல்கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரில் 56.6 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். 40 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3.5 சதவீதம் பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்று அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கி ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா என உலகம் முழுவதையும் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. இந்த காய்ச்சல் குறித்து அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம், பால்டிமோரில் உள்ள
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. “சீனா, இத்தாலி, தென்கொரியா, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரில் 56.6 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். 40 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3.5 சதவீதம் பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்” என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரத்தின்படி, உலகம் முழுவதும் 1,45,256 பேர் கோவிட் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா உட்பட உலகம் முழுவதும் 5,530 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 72,001 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரவும் தன்மை

சில கொடிய நோய்களின் பரவும்தன்மை, உயிரிழப்பு சதவீதம் குறித்து உலக சுகாதார அமைப்பு ஆய்வு நடத்தி புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கிறது. இதன்படி பறவைக் காய்ச்சலின் பரவும்தன்மை 57 சதவீதமாகவும் உயிரிழப்பு 1.1 சதவீதமாகவும் உள்ளது. எபோலா காய்ச்சலின் பரவும்தன்மை 50%, உயிரிழப்பு 2% ஆகவும், மெர்ஸ் காய்ச்சலின் பரவும்தன்மை 37%, உயிரிழப்பு 0.5% ஆகவும்,பெரியம்மையின் பரவும்தன்மை 30%, உயிரிழப்பு 5% ஆகவும், காசநோயின் பரவும்தன்மை 10.3%, உயிரிழப்பு 2.1% ஆகவும், ஸ்பானிஷ் புளுவின் பரவும்தன்மை 10%, உயிரிழப்பு 2.1% ஆகவும், சார்ஸின் பரவும்தன்மை 10%, உயிரிழப்பு 2.8% ஆகவும் உள்ளது. இந்த வரிசையில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலின் பரவும்தன்மை 1.5 சதவீதம் முதல் 3.5 சதவீதமாகவும் உயிரிழப்பு 0.7 சதவீதம் முதல் 3.4 சதவீதமாகவும் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

காசநோயால் உயிரிழப்பு அதிகம்

உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரத்தின்படி கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் நாள்தோறும் தோராயமாக 56 பேர் உயிரிழக்கின்றனர். இதைவிட காசநோய், ஹெபடைடிஸ் வைரஸ், எய்ட்ஸ் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. உலகம் முழுவதும் காசநோயால் நாளொன்றுக்கு 3,014 பேர் உயிரிழக்கின்றனர். இதேபோல ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்றால் 2430 பேரும், நிமோனியாவால் 2216 பேரும், எச்ஐவி/எய்ட்ஸால் 2110 பேரும், மலேரியாவால் 2002 பேரும், ஷிகெல்லாசிஸ் வைரஸால் 1644 பேரும், ரோடோவைரஸால் 1233 பேரும், புளு காய்ச்சலால் 1027 பேரும், நோரா வைரஸால் 548 பேரும், கக்குவான் இருமலால் 440 பேரும், தைராய்டு நோயால் 396 பேரும், மூளைக் காய்ச்சலால் 329 பேரும், தட்டம்மையால் 247 பேரும், ரேபிஸ் வைரஸால் 162 பேரும், மஞ்சள் காய்ச்சலால் 82 பேரும் நாள்தோறும் உயிரிழக்கின்றனர் என்று புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதய நோயாளிகளுக்கு பாதிப்பு:

சீனாவில் 80,813 பேர் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,176 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், காய்ச்சலால் உயிரிழந்த இதய நோயாளிகளின் எண் ணிக்கை 10.5 சதவீதமாக உள்ளது. நீரழிவு நோயாளிகளின் உயிரிழப்பு எண்ணிக்கை 7.3 சதவீதமாகவும் நுரையீரல் பாதிப்புள்ளவர்களின் உயிரிழப்பு 6.3 சதவீதமாகவும் ரத்த அழுத்த நோயாளிகளின் உயிரிழப்பு 6 சதவீதமாகவும் உள்ளது என்று சீன நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

81% பேருக்கு மிதமான பாதிப்பு

சீன மருத்துவர்கள் கூறும்போது, “கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் நோயாளிகளில் 81 சதவீதம் பேருக்கு மிதமான பாதிப்புகள் மட்டுமே இருந்தன. 14 சதவீதம் பேருக்கே காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருந்தது. மற்ற நோய்களை ஒப்பிடும்போது கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த காய்ச்சல் குழந்தைகளை அதிகம் பாதிப்பது இல்லை. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. எத்தனால் (62.71%), ஹைட்ரஜன் பெராக்சைடு (0.5%), ஹைபோகுளோரைட் (0.1%) கலந்த கிருமி நாசினி மூலம்வெளிப்புறத்தில் படிந்திருக்கும் வைரஸ் கிருமிகளைஅழிக்கமுடியும். பல்வேறு நாடுகளில் காய்ச்சலுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஓராண்டுக்குள் புதிய மருந்து அறிமுகமாகும். அதன்பிறகு இந்த காய்ச்சல் பிரச்சினைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.

முதியவர்களுக்கு அச்சுறுத்தல்

அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது.

10 முதல் 39 வயது பிரிவினருக்கு காய்ச்சல் தொற்று 0.2% ஆகவும்,

40 வயது முதல் 49 வயது பிரிவினருக்கு 0.4% ஆகவும்,

50 முதல் 59 வயது பிரிவினருக்கு 1.3% ஆகவும் உள்ளது.

அதேநேரம் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3.6 சதவீதம்,

70 வயதுக்கு மேற்பட்டோருக்கு 8 சதவீதம்,

80 வயதுக்கு மேற்பட்டோருக்கு 14.8 சதவீதம் வரை காய்ச்சல் தொற்று ஏற்படுகிறது என்று சீன நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x