Published : 12 Mar 2020 09:04 AM
Last Updated : 12 Mar 2020 09:04 AM

டெல்லி கலவரம்: கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு

புதுடெல்லி

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் கடந்த மாதம் வடகிழக்கு டெல்லியில் நடந்த மோதல் கலவரமாக மாறியது. வன்முறையில் 53 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரத்தின்போது உளவுத்துறை அதிகாரி அங்கித் ஷர்மா கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் தாஹிர் உசேன் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஆம் ஆத்மி அறிவித்தது. தாஹிர் உசேனின் சகோதரர் ஷா ஆலம் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக 3 பேர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், டெல்லியில் மதக் கலவரத்தை நடத்த தாஹிர் உசேனும், இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா (பிஃஎப்ஐ) அமைப்பும் பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் கவுன்சிலர் தாஹிர் உசேன், பிஎஃப்ஐ அமைப்பு மற்றும் மேலும் சிலர் மீது அமலாக்கத்துறை இயக்குநரகம் வழக்கு பதிவு செய்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்களுக்கு பிஎஃப்ஐ அமைப்பு பணம் கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஏற்கெனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. தாஹிர் உசேனை தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத் துறை அனுமதி கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தாஹிர் உசேனுடன் சேர்ந்து கலவரத்தில் ஈடுபட்டதாக அவரது கூட்டாளிகளான தயாள்பூர் பகுதியைச் சேர்ந்த அபித், நேரு விஹார் பகுதியைச் சேர்ந்த முகமது ஷடாப் மற்றும் ரஷீத் சைபி ஆகியோர் செவ்வாய்கிழமையன்று கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸார் நேற்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x