Last Updated : 20 Aug, 2015 08:42 AM

 

Published : 20 Aug 2015 08:42 AM
Last Updated : 20 Aug 2015 08:42 AM

கர்நாடகாவில் முதல் முறையாக நடமாடும் மலிவு விலை உணவகம் தொடக்கம்

தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகத்தைப் போல், கர்நாடகாவில் முதல் முறையாக கோலார் தங்கவயலில் நடமாடும் மலிவு விலை உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.

கோலார் தங்கவயல் நகரசபை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த உண வகத்தில் சைவம் மட்டுமல்லாமல் அசைவ உணவும் மலிவான விலையில் வழங்கப்படுகிறது. குறிப்பாக மக்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று உணவு வழங்குவதால் இந்த உணவகத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற மலிவு விலை உணவகங்களை தொடங்க வேண்டும் என சமூக வலைத் தளங்களில் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கர்நாடக அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

இந்த நடமாடும் மலிவு விலை உணவகத்தை தொடங்கி வைத்த கோலார் தங்கவயல் நகரசபை தலைவர் பக்தவத்சலம் 'தி இந்து'விடம் கூறியதாவது:

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 'அம்மா உணவகம்' போல கோலார் தங்கவயலிலும் ஏழை எளியோருக்கு பயன் தரும் வகையில் மலிவு விலை உணவகம் தொடங்க வேண்டும் என கோரிக்கை வந்தது. எனவே மத்திய அரசின் துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டுக் கழகத்தின் உதவியுடன் இந்த திட்டத்தை தொடங்கியுள்ளோம். சோதனை முயற்சியாக ஒரே ஒரு வாகனத்துடன் மாநிலத்திலேயே முதல் முறையாக இந்த திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.

பொதுமக்களிடம் வரவேற்பு

சுதந்திர தினத்தன்று மிகச் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதிலும் அசைவ உணவான மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, வறுவல் உள்ளிட்டவைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. எனவே தற்போது கூடுதலாக தலா 1 சைவ, அசைவ‌ உணவு வாகனத்தை இயக்க திட்டமிட்டுள் ளோம்.

தனியார் உணவகங்களுடன் ஒப்பிடுகையில் ரூ. 20 முதல் ரூ.40 வரை குறைவான விலையில் சைவ மற்றும் அசைவ உணவு களை விற்கிறோம். தொலைபேசியில் தொடர்புகொண்டும் உணவு வகைகளை ஆர்டர் செய்யலாம். அடுத்த அரை மணி நேரத்தில் வாடிக்கையாளரின் வீட்டுக்கே சென்று உணவை வழங்குவோம்.

இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் மட்டுமல்லாமல் 50-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்களும் பயனடைந்திருப்பது திருப்தி அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x