Published : 04 Mar 2020 06:48 AM
Last Updated : 04 Mar 2020 06:48 AM

இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை: ஒன்றிணைந்து செயல்படுவோம், பீதியடைய வேண்டாம் என மக்களுக்கு அறிவுரை

கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக ஆக்ராவில் தாஜ்மஹாலை நேற்று சுற்றிப் பார்த்த பெண்கள் முன்னெச்சரிக்கையாக முகமூடி அணிந்திருந்தனர்.படம்: பிடிஐ

புதுடெல்லி

இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பரவுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்த காய்ச்சல் குறித்து அச்சப்பட வேண்டாம், அனைவரும் ஒன் றிணைந்து செயல்படுவோம் என்று மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வூஹானில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பரவுவது கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப் பட்டது. அங்கிருந்து 64 நாடுகளுக்கு இந்த காய்ச்சல் பரவியுள்ளது. நேற் றைய நிலவரத்தின்படி உலகம் முழு வதும் 92,153 பேர் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 80,151 பேர் சீனர் கள். உலகம் முழுவதும் காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,127 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,943 பேர் சீனர்கள்.

மேலும் ஒருவருக்கு பாதிப்பு

சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவி உட்பட 3 பேருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் இருப்பது கடந்த பிப்ரவரியில் கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு 3 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் டெல்லி, ஹைதராபாத்தில் தலா ஒருவர், ஜெய்ப்பூரில் இத்தாலி சுற்றுலா பயணி ஆகியோர் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப் பட்டிருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜெய்ப்பூரில் சிகிச்சை பெறும் இத்தாலி சுற்றுலா பயணியின் மனைவிக்கு காய்ச்சல் தொற்றியிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 4 பேருக் கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று அவசர ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள், சுகாதாரத் துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர். கோவிட்-19 வைரஸ் காய்ச்சலை தடுப்பது குறித்து விரிவாக ஆலோ சனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத் துக்குப் பிறகு பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

கோவிட்-19 வைரஸ் காய்ச் சலை கட்டுப்படுத்துவது தொடர் பாக முக்கிய ஆலோசனை நடத்தப் பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் மக்களை பரி சோதனை செய்வது, மருத்துவ சிகிச்சை அளிப்பதில் பல்வேறு துறைகள், மாநில அரசுகள் ஒன் றிணைந்து பணியாற்றி வருகின் றன. இந்த காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். முன்னெச்சரிக்கையாக சில சிறிய, முக்கிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்றை தடுப்பது தொடர்பான மத்திய சுகாதாரத் துறையின் அறிவுரைகளை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள் ளார். அதில் கூறியிருப்பதாவது: உங்கள் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். கண், மூக்கு, வாயை, கைகளால் தொடக்கூடாது. மூகமூடி அணிந்து கொள்வது நல்லது. தும்மும்போது, இருமும்போது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும். இருமல், சுவாசக் கோளாறுடன் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மேலும் விவரங்களுக்கு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை 91-11-2397 8046 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித் துப் பேசினார். அப்போது கோவிட்-19 வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் டெல்லி கலவரம் தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத் தினர்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் தனியாக அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பிறகு டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறும்போது, "கோவிட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க டெல்லியில் 25 மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

மருந்து ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு

இந்தியாவுக்கு தேவையான மருந்து மூலப்பொருட்களில் சுமார் 70 சதவீதத்தை சீனா பூர்த்தி செய் கிறது. கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் காரணமாக சீன மருந்து பொருட்களின் இறக்குமதி தடை பட்டுள்ளது. இதன்எதிரொலியாக இந்தியாவில் மருந்துகளின் விலை 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பாரசிட்டமால், வைட்டமின் பி1, பி6, பி12, ஆன்டிபயாடிக் மருந்துகள் உட்பட 26 வகையான மருந்துகளை இந் தியாவில் இருந்து வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள் ளது. இதுதொடர்பாக அர சாணையும் வெளியிடப் பட்டுஉள்ளது.

4 நாட்டினருக்கு தடை

இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருகிறது. தென்கொரியாவில் 5186, ஈரானில் 2336, இத்தாலியில் 2036, ஜப்பா னில் 990 பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக இந்த 4 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கப்படாது. ஏற்கெனவே வழங்கபட்ட விசாக்கள் செல்லாது. கட்டாய தேவை உள்ளோர் இந்திய தூதரகத்தை அணுகலாம் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது.

உலகம் முழுவதும் உள்ள ட்விட் டர் நிறுவன கிளைகளில் 5,000 பேர் பணியாற்றுகின்றனர். அவர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற அந்த நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் 2 பள்ளிகள் மூடல்

டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அண்மையில் இத்தாலி சென்றுவிட்டு நாடு திரும்பினார். அவருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்றியிருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. டெல்லி ஆர்எம்எல் மருத்துவமனையின் தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு அவர் தனது குழந்தையின் பிறந்த நாளை வீட்டில் கொண்டாடினார். இதில் சுமார் 40 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அந்த 40 பேரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 28 நாட் கள் அவர்கள் தனிமைப்படுத் தப்படுவார்கள் என்று டெல்லி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவிட்-19 வைரஸ் காய்ச் சலால் பாதிக்கப்பட்டவரின் குழந்தை மற்றும் அவரது வீட்டில் நடந்த பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர் டெல்லி அருகே நொய்டாவில் உள்ள 2 பள்ளிகளில் படிக்கின்றனர். முன்னெச்சரிக்கையாக அந்த 2 பள்ளிகளும் மூடப் பட்டுள்ளன. இரு பள்ளிகளின் வகுப்பறைகள், சுற்று வட்டார பகுதிகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட டெல்லி தொழிலதிபர் அங் குள்ள ஹயாத் நட்சத்திர ஓட்ட லுக்கு அண்மையில் குடும்பத்துடன் சென்றுள்ளார். அந்த ஓட்டல் முழு வதும் கிருமி நாசினி மூலம் சுத் தம் செய்யப்பட்டு வருவதாகவும் ஓட்டல் ஊழியர்கள் தனிமைப்படுத் தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லி தொழிலதிபருடன் அவரது உறவினர்கள் சிலரும் இத்தாலி சென்று நாடு திரும்பி யுள்ளனர். ஆக்ராவை சேர்ந்த அவர்களில் 6 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக் கப்படுகிறது. அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப் பப்பட்டுள்ளன. ஆக்ராவில் உள்ள ஓட்டல்களில் தங்கியுள்ளவர்கள் குறித்து உத்தரபிரதேச அரசு ஆய்வு நடத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x