Published : 24 Feb 2020 08:52 AM
Last Updated : 24 Feb 2020 08:52 AM

பாகுபலியாக மாறிய ட்ரம்ப்

புதுடெல்லி

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ‘பாகுபலி' திரைப்படத்தின் 2 பாகங்கள் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பெரும் புகழ் பெற்றது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருவதையொட்டி அவரை பாகுபலியாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்ஸ்கள் பரவி வருகின்றன.

இந்த மீம்ஸ் வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் பாகுபலி திரைப்படத்தில் காளகேயன் படையை பிரபாஸ் துவம்சம் செய்வது உட்பட அந்த படத்தின் பல்வேறு வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோக்களில் நடிகர் பிரபாஸ் முகத்துக்குப் பதிலாக அதிபர் ட்ரம்பின் முகத்தை பொருத்தி மார்பிங் செய்யப்பட்டுள்ளது. வீடியோவில் ட்ரம்பின் மனைவி மெலானியாவின் முகமும் மார்பிங் செய்யப்பட்டு பதிவிடப்பட்டிருக்கிறது.

பாகுபலி மட்டுமன்றி மேலும் சில இந்தி திரைப்பட பாடல்களுக்கு அதிபர் ட்ரம்ப் நடனமாடுவது போன்றும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பரவி வருகின்றன.

அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் சிறந்த நண்பர்களை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் மும்பை, புனே, டெல்லி குர்காவ்ன், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் அதிபர் ட்ரம்பின் நிறுவனம் பல்வேறு கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவர் அதிபராவதற்கு முன்பு பலமுறை டெல்லி, மும்பைக்கு வந்து சென்றுள்ளார். பாலிவுட்டிலும் இந்திய தொழில் துறையிலும் ட்ரம்புக்கு அதிக நண்பர்கள் உள்ளனர். இந்திய பயணத்தின்போது அவர்களை, ட்ரம்ப் சந்திக்கக்கூடும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x