Published : 19 Feb 2020 08:02 AM
Last Updated : 19 Feb 2020 08:02 AM

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற நில ஆவணத்தை ஆதாரமாக பயன்படுத்த முடியாது- குவாஹாட்டி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

குவாஹாட்டி

வங்கி கணக்கு, நில ஆவணங்கள், பான் கார்டை பயன்படுத்தி என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் ஒருவர் இடம் பெற முடியாது என்றும், இந்த ஆவணங்களை ஆதாரமாக பயன்படுத்த முடியாது என்றும் குவாஹாட்டி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அசாமில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின்போது மேற்கொள்ளப்பட்ட என்ஆர்சி கணக்கெடுப்பில் 19 லட்சம் பேரின் பெயர் விடுபட்டிருந்தது. இவர்கள் இந்திய குடிமகன்கள் என்பதை உறுதி செய்வதற்காக வங்கதேசத்தை ஒட்டியுள்ள எல்லையில் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

என்ஆர்சி பட்டியலில் இடம்பெறாதவர்கள் தீர்ப்பாயத்தை அணுகலாம். தீர்ப்பாயம் அவர்களை நிராகரித்தால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். என்.ஆர்.சி.யில் இடம் பெறாதவர்களுக்கு சட்ட நிவாரண வாய்ப்புகள் இருக்கும் வரையில் அவர்கள் அகதிகள் முகாமுக்கு அனுப்பப்பட மாட்டார்கள் என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே அசாமிலுள்ள தீர்ப்பாயத்தை அணுகியிருந்த ஜபீதா பேகம் என்பவரை வெளிநாட்டை சேர்ந்தவர் என தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து அவர் குவாஹாட்டி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜபீதா பேகம் அவரது தந்தை மற்றும் கணவரின் அடையாள சான்றிதழை முன் வைத்துள்ளார். இவற்றை ஜபீதாவின் ஊர்த் தலைவர் அளித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஜபீதா பேகம் தான் இந்தியாவைச் சேர்ந்தவர்தான் என்பதை நிரூபிக்க 14 விதமான ஆவணங்களை அளித்துள்ளார். ஆனால் பெற்றோருக்கும் தனக்கும் உள்ள உறவை நிரூபிக்கும் ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதனை காரணம் காட்டி அவர் இந்திய குடிமகன் இல்லை என்ற முடிவுக்கு வந்ததாக தீர்ப்பாயம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

விசாரணைக்குப் பின்னர் நீதிபதிகள் மனோஜித் புயான், பார்திவ்ஜோதி சைகியா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

இந்திய குடியுரிமையை நிரூபிப்பதற்கு பான் கார்ட், நில ஆவணங்கள், வங்கி ஆவணங்களை சான்றாக எடுத்துக்கொள்ள முடியாது

2016-ல் இதுபோன்ற வழக்கில் குவாஹாட்டி நீதிமன்றம் இதுபோன்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. பான் கார்ட், நில ஆவணங்கள், வங்கி ஆவணங்களை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று இதே நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது.

எனவே தீர்ப்பாயத்தின் முன்பு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆராய்ந்து தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். எனவே ஏற்கெனவே இந்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைப் பின்பற்றி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x