Last Updated : 13 Feb, 2020 03:32 PM

 

Published : 13 Feb 2020 03:32 PM
Last Updated : 13 Feb 2020 03:32 PM

போலீஸாரின் அலட்சியத்தால் 68 வயது முதியவருக்கு 4 மாதம் சிறைவாசம்: ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட ம.பி. உயர் நீதிமன்றம் 

இந்தூர்

பரோலில் சென்ற குற்றவாளியைப் பிடித்து வருவதற்குப் பதிலாக சம்பந்தமே இல்லாமல் 68 வயது முதியவரைப் பிடித்து ம.பி. காவல்துறை சிறையில் அடைத்தது. இதனால் ம.பி.அரசு பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கின் மீதான தீர்ப்பில் போலீஸாரின் அலட்சியம் குறித்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்தது.

ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபருக்குப் பதிலாக ஒரு அப்பாவி மூத்த குடிமகனை நான்கு மாதங்கள் காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். உண்மையான குற்றவாளி பரோலில் விடுவிக்கப்பட்ட மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இறந்துவிட்டார்.

நடந்தது என்ன?

தார் மாவட்டத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் ஹுஸ்னா என்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தனது குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக பரோலில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் செப்டம்பர் 10, 2016 அன்று இறந்துவிட்டார்.

தண்டனை பெற்ற கைதி பரோலின் முடிவில் சிறைக்குத் திரும்பாத நிலையில், ​​அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஹுஸ்னா என்பவருக்குப் பதிலாக ஹுசனைக் கைது செய்த காவல்துறையினர், தவறான அடையாளத்தின் காரணமாக அவரை அக்டோபர் 18, 2019 அன்று இந்தூர் மத்திய சிறைக்கு அனுப்பினர்.

தார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹுசனின் (68) மகன் கமலேஷ் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்த நிலையில், அவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.சி.ஷர்மா மற்றும் நீதிபதி ஷைலேந்திர சுக்லா ஆகியோர் திங்கள்கிழமை அன்று இத்தீர்ப்பை வழங்கினர், அதே நேரத்தில் மனுதாரரின் ஆட்கொணர்வு மனுவுக்கும் அனுமதி வழங்கினர்.

தீர்ப்பில் இரண்டு பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு கூறியதாவது:

''அப்பாவி முதியவர் தவறாக கைது செய்யப்பட்ட நேரத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் கோப்புகளில் ஹுசன் என்பவரை ஹுஸ்னா (இறந்த குற்றவாளி) என்பவருக்குப் பதிவு செய்யப்பட்டது எப்படி? சம்பந்தப்பட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.

தான் குற்றமற்றவர் என்று பலமுறை கெஞ்சியும் அந்த வயதான படிக்காத பழங்குடியினரை போலீஸார் கைது செய்துள்ளது கண்டனத்திற்கு உரியது. போலீஸாரின் கடும் அலட்சியம் காரணமாகவே இது நடந்துள்ளது. அவர்களுக்கு நீதிமன்றம் ஆழ்ந்த அதிருப்தியைத் தெரிவித்துக்கொள்கிறது. ஹுசனை உடனடியாக விடுவிக்கவும் இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது.

இந்த அலட்சியத்தோடு தொடர்புடைய முக்கிய அதிகாரியான துணைப்பிரிவு காவல்துறை அதிகாரி (எஸ்.டி.ஓ.பி) மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிடப்படுகிறது. இந்த அதிகாரி இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு வாக்குமூலத்தில் தவறான தகவல்களை வழங்கினார்.

தற்போதைய வழக்கு தவறானவர்களை சரியாக அடையாளம் காணாமல், அப்பாவி மக்கள் கைது செய்வதற்கான ஒரு எடுத்துக்காட்டு இது. எனவே அவர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்காகவும், தற்போதைய மனுதாரரின் தந்தையைப் போன்ற எந்த அப்பாவி நபரும் சிறையில் அடைக்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது மிக அவசியமானது.

எனவே, கைது செய்யப்படும் அனைத்து நிகழ்வுகளிலும், பயோ மெட்ரிக் செயல்முறை மூலம் கைது செய்யப்பட்ட நபர்களை அதிகாரிகள் அடையாளம் காண வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது''.

இவ்வாறு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x