Last Updated : 10 Aug, 2015 05:48 PM

 

Published : 10 Aug 2015 05:48 PM
Last Updated : 10 Aug 2015 05:48 PM

நாடாளுமன்ற முடக்க நடவடிக்கை: சோனியா, ராகுல் மீது அருண் ஜேட்லி சாடல்

சுஷ்மா ஸ்வராஜ் விவகாரத்தை ‘ஊதிப்பெருக்கி’ நாடாளுமன்றத்தை முடக்கும் செயல், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுக்கச் செய்யும் உத்தியே என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சாடியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரே மக்களவையை முடக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றனர், பிற காங்கிரஸ் கட்சியினர் இதனை விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அருண் ஜேட்லி பேசியபோது, “அவை நடக்கக் கூடாது முடக்கப்படவேண்டும் என்பதை பலரும் விரும்பவில்லை, காங்கிரஸ் கட்சியிலேயே கூட இதனை விரும்பாதவர்கள் உள்ளனர், அந்தக் கட்சியின் 2 முதன்மை தலைவர்கள் மட்டுமே இதில் உறுதியாக உள்ளனர்.

மக்களவை நடைபெறக் கூடாது, மசோதாக்கள் நிறைவேறக்கூடாது, இதனால் நாட்டுக்கு தீமை ஏற்பட்டால் அது அப்படியே ஆகட்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.

சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை அவர்களால் நிறுத்த முடியாவிட்டாலும் குறைந்தது தாமதப்படுத்தலாமே என்பதுதான் அவர்களது குறிக்கோள்” என்றார்.

சுஷ்மா ஸ்வராஜ் குடும்பத்துக்கு லலித் மோடி பணம் அளித்துள்ளார் என்றும் அந்த விவகாரத்தை சுஷ்மா வெளியிடவேண்டும் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளது பற்றி அருண் ஜேட்லி கூறும்போது, "காங்கிரஸ் தலைவர்களிடம் இத்தகைய கேள்விகளை எழுப்பினால் அவர்களிடம் பதில் இல்லை என்பதையும் காங்கிரஸ் புரிந்து கொள்வது நலம்.

சுஷ்மா விவகாரம் என்பது ஒரு சாக்குதான் என்று நாங்கள் புரிந்து கொள்கிறோம். உண்மையான காரணம் என்னவெனில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேறிவிடக் கூடாது என்பதே. அதனை நிறுத்த வேண்டும் என்பதே அவர்களது உண்மையான நோக்கம். இந்தியாவின் வளர்ச்சியை பாதிப்படையச் செய்வது என்று முனைந்து செயல்படுகிறார்கள்.

இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்தால் பொருளாதாரம் உத்வேகம் பெறும், அது கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கின்றனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கூட பொருளாதார வளர்ச்சி என்பது அதற்கு முன்னுரிமையாக இருந்ததில்லை. காங்கிரஸ் தலைவர் அரசுக்குள் செலுத்திய சில கொள்கைகள் பொருளாதார மந்த நிலை உருவாக்கத்துக்குக் காரணமாக கூட அமைந்தன.

சரக்கு மற்றும் சேவை வரியில் காங்கிரஸ் முழுதும் தனிமைப்பட்டு விட்டதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்வேதான் தொந்தரவு ஏற்படுத்தும் ஒரு செயல்பாட்டுக்குச் சென்றனர்” என்றார் அருண் ஜேட்லி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x