டெல்லி தேர்தல்; மீண்டும் வெற்றி வாகை சூடுகிறது ஆம் ஆத்மி: 3-ம் முறையாக முதல்வராகிறார் கேஜ்ரிவால்

டெல்லி தேர்தல்; மீண்டும் வெற்றி வாகை சூடுகிறது ஆம் ஆத்மி: 3-ம் முறையாக முதல்வராகிறார் கேஜ்ரிவால்
Updated on
2 min read

டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி அரசு அமைவது உறுதியாகியுள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால் 3-ம் முறையாக முதல்வர் பதவியை ஏற்பார் எனத் தெரிகிறது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 8-ம் தேதி நடந்து முடிந்தது. பெரும் பரபரப்படன் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது.

கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்குச் செய்த நலத்திட்டப் பணிகள், திட்டங்கள் போன்றவற்றைக் கூறி, கேஜ்ரிவால் பிரச்சாரம் செய்தார். அதேசமயம், 1998-ம் ஆண்டுக்குப் பின் பாஜகவால் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஏறக்குறைய 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சியை பாஜக மேற்கொண்டது.

அதேபோல காங்கிரஸ் கட்சியும், 2014-ம் ஆண்டுக்குப் பின் டெல்லியைக் கைப்பற்ற முடியாத நிலை உள்ளது. இதனால் இந்த முறை காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி இருந்தாலும், பாஜக, ஆம் ஆத்மி இடையேதான் தீவிரமான போட்டி இருந்தது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பகள் அனைத்தும் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்து இருந்தன. இந்தநிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆம் ஆத்மி பெரும்பான்மைக்குத் தேவையான 36 இடங்களை விடவும் கூடுதல் இடங்களில் முன்னிலை பெற்றது.

நண்பகல் நிலவரப்படி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 57 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் சூழல் உள்ளது. எதிர்க்கட்சியான பாஜக 13 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் எந்தத் தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை.

கடந்த தேர்தல் ஒப்பீடு

இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி 53.29 சதவீத வாக்குகளையும், பாஜக 39.05 சதவீத வாக்குகளையும் பெறும் சூழல் உள்ளது. அதேசமயம் காங்கிரஸ் 4.17 சதவீத வாக்குகள் மட்டுமே பெறும் நிலை உள்ளது.

2015-ம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 54.03 சதவீத வாக்குகளையும், பாஜக 32.03 சதவீத வாக்குகளையும் காங்கிரஸ் 9.07 சதவீத வாக்குகளையும் பெற்று இருந்தன.

கடந்த தேர்தலை ஒப்பிட்டால் ஆம் ஆத்மியின் வாக்குகள் அதே அளவு உள்ளது. அதேசமயம் பாஜக கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளது. காங்கிரஸ் தனது வாக்குகளைப் பாதிக்கும் அதிகமாக இழந்துள்ளது.

முதல்வர் கேஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியல் முன்னிலை பெற்றுள்ளளார். அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் முன்னிலை பெற்றுள்ளனர். இதன் மூலம் டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி அரசு அமைவது உறுதியாகியுள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால் 3-ம் முறையாக முதல்வர் பதவியை ஏற்பார் எனத் தெரிகிறது.

தவறவிடாதீர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in