

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என அறிவித்ததற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெடுவாசல் போராட்டக் குழுவினர் நேரில் நன்றி தெரிவித்தனர்.
காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் தலைவாசலில் அறிவித்தார்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், திருச்சி, கரூர் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இது, அப்பகுதி விவசாயிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. பல விவசாய அமைப்புகள் மட்டுமின்றி, கட்சிப் பாகுபாடின்றி பல அரசியல் கட்சித் தலைவர்களும் இதனை வரவேற்றுள்ளனர்.
சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து, இதற்கு தனிச் சட்டம் கொண்டு வரப்படும் எனவும், ஹைட்ரோகார்பன் உட்பட விவசாயத்தைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் எனவும் முதல்வர் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று (பிப்.11) இந்தக் கோரிக்கைக்காக நீண்ட காலம் போராடி வந்த நெடுவாசல் போராட்டக் குழுவினர், சென்னை பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரைச் சந்தித்தனர். காவிரி டெல்டா, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற அறிவிப்புக்காக, முதல்வர் பழனிசாமிக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். அப்போது, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடனிருந்தார்.
இந்தச் சந்திப்பின் போது, வேளாண் மண்டலம் அறிவிப்புக்காக உடனடியாக தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும், சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து, காவிரி டெல்டாவில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது எனவும் போராட்டக் குழுவினர் முதல்வரிடம் வலியுறுத்தினர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
தவறவிடாதீர்