

புதுடெல்லி: சீனாவில் கரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. அந்த நாட்டு அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, இதுவரை 910 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் உதவ தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு நேற்று முன்தினம் கடிதம் அனுப்பினார். இதற்கு சீன அரசு நன்றி தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து கேரளா திரும்பிய 3 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு திருச்சூர் மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் ஒரு மாணவி முழுவதுமாக குணமடைந்து உள்ளார். அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள 'டயமண்ட் பிரின்சஸ்' சொகுசு கப்பலில் 138 பேர் இந்தியர்கள் உள்ளனர். இந்த கப்பலில் சுமார் 100-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கப்பலில் பரிதவித்து வரும் இந்தியர்கள், சமூக வலைதளம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில், தங்களை காப்பாற்றி அழைத்துச் செல்லுமாறு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.