Published : 08 Feb 2020 08:04 AM
Last Updated : 08 Feb 2020 08:04 AM

கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய மோசடி நபர்கள் எண்ணிக்கை 72: இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை

நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு பொருளாதார மோசடி குற்றங்கள் செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்கள் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.

வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாதது, நிதி மோசடி,பொருளாதார குற்றங்கள் எனபலவித குற்றச்சாட்டுகள் இவர்கள்மீது உள்ளன. இவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்தகவலை மக்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்விதம் தப்பிஓடிய நபர்கள் மீதான குற்றங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மீது, தேடப்படும் நபர் (எல்ஓசி), ரெட் கார்னர் நோட்டீஸ் மற்றும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடைமுறை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார குற்றவாளிகள் தடுப்பு சட்டம், 2018 (எஃப்இஓஏ) பிரிவின்கீழ் நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவர்கள் தங்கி யுள்ள நாடுகளுடான பரிவர்த் தனை ஒப்பந்தங்கள் அடிப்படை யிலும் நடவடிக்கை எடுக்கப்படு வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு வெளிநாடுகளில் வசிப்பவர்களில் முக்கியமானவர்கள் விவரம்: புஷ்பேஷ் பெய்ட், ஆஷிஷ் ஜோபன்புத்ரா, விஜய் மல்லையா, சன்னி கல்ரா, எஸ்.கே. கல்ரா, ஆர்த்தி கல்ரா, வர்ஷா கல்ரா, ஜதின் மேத்தா, உமேஷ் பரேக், கம்லேஷ் பரேக், நிலேஷ் பரேக், எக்லவ்யா கார்க், வினய் மிட்டல், நீரவ் மோடி, நீஷல் மோடி, மெகுல் சோக்சி, சப்ய சேத், ராஜீவ் கோயல், அல்கா கோயல், லலித் மோடி, நிதின் ஜெயந்திலால் சண்டேஸரா, திப்திபென் சேதன்குமார் சண்டேஸரா, ரிதேஷ் ஜெயின், ஹிதேஷ் என் படேல், மயூரிபென் படேல், பிரிதி ஆஷிஷ் ஜோபன்புத்ரா உள்ளிட்டோரும் அடங்குவர் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி அப்போதைய மத்திய நிதித்துறை இணையமைச்சர் எஸ்பி சுக்லா கூறுகையில் கடந்த 5 ஆண்டுகளில் 27 பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பியோடி விட்டதாக தெரிவித்தார். இப்போது ஓராண்டில் இந்த எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x