

பிரதமர் மோடிக்கு எதிராக இயல்புக்கு மாறாகப் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு மக்களவையில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கடும் கண்டனம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவைத் தலைவர் முன்பு கூடி நின்று அமளியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரதமர் மோடி குறித்து சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய வார்த்தைகளைக் கூறி விமர்சித்திருந்தார்.
(அதாவது, நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளதற்கு இளைஞர்கள் பிரதமர் மோடியை பிரம்பால் அடிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி இருந்தார்.)
இந்நிலையில் மக்களவை இன்று காலை தொடங்கியதும், கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, நாட்டில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ள விவரம் குறித்துக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய சுதாகாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பதில் அளிக்க எழுந்தார். இந்த கேள்விக்குப் பதில் அளிக்கும் முன், ராகுல் காந்திக்குக் கண்டனம் தெரிவிப்பதாக அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.
பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இயல்புக்கு மாறான வார்த்தைகளைக் கூறி விமர்சித்துள்ளார். அவரின் வார்த்தைகளை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன் எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, எம்.பி. கேட்ட கேள்விக்குப் பதிலைக் கூறலாம் என ஹர்ஷவர்த்தனிடம் தெரிவித்தார்
மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தொடர்ந்து பதில் அளிக்க முயன்றார். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் மத்திய அமைச்சருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தமிழக எம்.பி. மாணிக் தாக்கூர், தனது இருக்கையில் இருந்து எழுந்து நடந்து ஆவேசமாக ஹர்ஷவர்தன் இருக்கை அருகே நடந்து வந்தார். அப்போது அங்கிருந்த உ.பி. பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் தனது கைகளால் மத்திய அமைச்சரை மறித்துக் கொண்டு மாணிக் தாக்கூர், அமைச்சரை நெருங்குவதைத் தடுத்தார்.
அப்போது கேரள காங்கிரஸ் எம்.பி. ஹிபி எடனும் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாஜக, காங்கிரஸ் எம்.பி.க்கள் இருதரப்பிலும் வந்தபோது அவர்களைத் தடுத்து இடத்தில் அமருமாறு அமைச்சர் ஸ்மிருதி இரானி கேட்டுக்கொண்டு சமாதானம் செய்தார்.
அவையில் பெரும் குழப்பமும், கூச்சலும் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவையை நண்பகல் 1 மணிவரை சபாநாயகர் ஒம் பிர்லா ஒத்திவைத்தார். அதன்பின் ஒரு மணிக்கு அவை மீண்டும் கூடியபோது காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபடவே அவையைப் பிற்பகல் 2 மணிவரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
தவறவிடாதீர்..