ஜனநாயக நாட்டில் எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் அடைத்து வைத்திருப்பது அருவருப்பானது: சிதம்பரம் கண்டனம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் : கோப்புப்படம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் : கோப்புப்படம்
Updated on
2 min read

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா இருவர் மீதும் எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல் அவர்களைப் பொதுப்பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்து வைத்திருப்பது ஜனநாயக நாட்டில் அருவருப்பானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் பரூக் அப்துல்லாவின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி ஆகியோரை மாநில அரசு வீட்டுக் காவலில் வைத்தது.

கடந்த டிசம்பர் மாதத்தோடு பரூக் அப்துல்லாவுக்கு முதல் 3 மாதக் காவல் முடிந்த நிலையில், அடுத்த 3 மாதங்களுக்குக் காவலை நீட்டித்து மாநில நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கிடையே முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் மீது பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காஷ்மீர் நிர்வாகம் நேற்று அறிவித்தது. இந்த மூன்று முன்னாள் முதல்வர்களும் கடந்த 6 மாதங்களாக தடுப்புக்காவலில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், " உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோருக்கு எதிராகக் கொடூரமான பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

ஜனநாயகத்தில் எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லாமல் தடுப்புக்காவலில் அடைத்து வைத்திருப்பது மோசமான அருவருப்பான செயல். அநியாயமான சட்டங்கள் செயல்படுத்தும்போது, அநியாயமான சட்டங்கள் அமல்படுத்தும்போது அமைதியாக எதிர்ப்புத் தெரிவிப்பதைவிட மக்களால் என்ன செய்துவிட முடியும்?

போராட்டங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு இட்டுச் செல்லும், நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டதால், எம்.பிக்கள் அதற்கு கண்டிப்பாகப் பணிந்து நடக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுகிறார். மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற உணர்ச்சிமிகு உதாரண மனிதர்களையும், வரலாற்றையும் அவர் மறந்துவிட்டார்

அநியாயமான சட்டங்களை அமைதியான எதிர்ப்பு, சட்ட ஒத்துழையாமை மூலம் எதிர்க்க வேண்டும். இதுதான் சத்தியாகிரஹம்.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்

தவறவிடாதீர்..

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in