Published : 05 Feb 2020 09:29 PM
Last Updated : 05 Feb 2020 09:29 PM

உள்நாட்டு போட்டியில் சச்சினை முதல்முறையாக டக்அவுட்டில் ஆட்டமிழக்கச் செய்த பந்துவீச்சாளருக்கு இன்று பிறந்தநாள்

உள்நாட்டுப் போட்டியில் சச்சினை முதல்முறையாக டக்அவுட்டில் ஆட்டமிழக்கச் செய்த பந்துவீச்சாளருக்கு இன்று பிறந்தநாள்

இப்போதுள்ள இந்திய அணியில் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் வேகப்பந்துவீச்சில் ஸ்விங் பந்துவீச்சாளர் யார் என்றால் பெரும்பாலானோர் கூறும் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார்தான் என்பதில் மாற்றமில்லை.

பவுலிங் ஆல்ரவுண்டர் என்று புவ்வியை அழைத்தாலும் பெரிய அளவுக்கு பேட்டிங் செய்தது இல்லை. ஆனால், இந்திய அணியில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய பிரிவுகளிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியப் பந்துவீச்சாளர் எனும் பெருமையைப் பெற்றவர் புவனேஷ்வர் குமார் .

அவருக்குத்தான் இன்று 30-வது பிறந்தநாளாகும். கிரிக்கெட் உலகில் புவ்வி என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் நகரில் கடந்த 1990-ம் ஆண்டு, பிப்ரவரி 5-ம் தேதி பிறந்த புவனேஷ்வர் குமாருக்கு சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் விளையாட்டு மீது அதிகமான ஆர்வம் இருந்தது.

இதைப் பார்த்த இவரின் சகோதரி ரேகா அதானா , புவனேஷ்வர் குமாரின் 13-வது வயதில் அவரை கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் முகாமுக்கு அழைத்துச் சென்று பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். அதன்பின் கிரிக்கெட்டில் முறையாகப் பயிற்சி எடுத்தார் புவனேஷ்வர் குமார்.

தொடக்கத்திலிருந்து பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்ட புவனேஷ்வர் குமார் உத்தரப்பிரதேச உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடினார். அதன்பின் மத்திய மண்டலத்தில் விளையாடி, துலீப் டிராபி போட்டியில் புவனேஷ்வர் குமார் விளையாடினார்.

தனது பந்துவீச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த புவனேஷ்வர் குமார் தனது 17-வது வயதில் முதல் தரப்போட்டியில் களமிறங்கினார்.

வடக்கு மண்டலத்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் தனது ஸ்விங் பந்துவீச்சால் கலக்கிய புவனேஷ்வர் குமார் ஓவருக்கு 3.3 ரன்கள் கொடுத்துச் சிறப்பாகப் பந்துவீசினார். அதுமட்டுமல்லாமல் கடைசி வரிசையில் களமிறங்கிய புவனேஷ்வர் குமார் 312 பந்துகளில் 128 ரன்கள் அடித்து பேட்டிங்கிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

2008-09-ம்ஆண்டு ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கரை முதல்முறையாக டக்அவுட்டில் ஆட்டமிழக்கச் செய்த முதல் பந்துவீச்சாளர் எனும் பெருமை புவனேஷ் பெற்றார்.

புவனேஷ் குமாரின் பந்துவீச்சு உள்நாட்டுப் போட்டிகள், முதல் தரப்போட்டிகளில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்திழுக்க இந்திய அணியில் விளையாட அவருக்கு 2012-ம் ஆண்டு இடம் கிடைத்தது.

புவனேஷ்வர் குமாருக்கு முதல் அறிமுகமே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்றால் சொல்லவா வேண்டும். பெங்களூருவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசிய புவனேஷ்வர் குமாரின் இன்ஸ்விங், அவுட்ஸிவிங்கை தாங்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். 6 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார்.

அதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் புவனேஷ்வர்குமார் அறிமுகமாகினால். புவனேஷ் வீசிய முதல் ஓவர் முதல் பந்திலேயே பாகிஸதான் வீரர் முகமது ஹபிஸ் விக்கெட்டை சாய்த்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அதன்பின் புவனேஷ்வருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

புவனேஷ் குமாருக்கு டெஸ்ட் போட்டி அறிமுகம் என்பது, 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் இருந்தது. பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்ட புவனேஷ்வர் குமார், 9-வது வீரராகக் களமிறங்கி தோனியுடன் சேர்ந்து ரெக்கார்ட் பாட்னர்ஷிப் அமைத்தார்.

2013-ம் ஆண்டு இந்திய அணி சாம்பியன்ஷ் கோப்பையை வென்றது போது அணியில் புவனேஷ்வர் குமார் இடம் பெற்றிருந்தார். அந்த போட்டித்தொடரில் சிறப்பாகவும் செயல்பட்டார். அதே ஆண்டில் ஜூலை மாதம் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி புவனேஷ்வர் குமார் ஜொலித்தார். அந்த முத்தரப்பு தொடரிலும் தொடர் நாயகன் விருதையும் புவனேஷ் வென்றார்

அதன்பின் 2015-ம் ஆண்டு, 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணி, 2017 ஐசிசி சாம்பியன்ஸ்டிராபிக்கான இந்திய அணி அனைத்திலும் புவனேஷ்வர் குமார் இடம் பெற்றார்.

இதுவரை 114 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஷ்வர் குமார் 132 விக்கெட்டுகளையும், 526 ரன்கள் சேர்த்துள்ளார். 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 63 விக்கெட்டுகளையும், 552 ரன்களையும் சேர்த்துள்ளார். 43 டி20 போட்டிகளில் விளையாடிய புவனேஷ்வர் குமார் 23 ரன்களும், 41 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இந்திய அளவில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் என்பது பெருமைக்குரியதாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x